கெய்ரோ:சிரியாவில் ஏகாதிபத்தியவாதி பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் துவங்கி பல மாதங்கள் கடந்த நிலையில் ஃபலஸ்தீன் போராட்ட இயக்கமும், சிரியா மற்றும் ஈரானின் நீண்டகால நண்பரான ஹமாஸ் தனது மெளனத்தை கலைத்துள்ளது.
கெய்ரோவில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் ஆற்றிய உரையில் ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா சிரியா எதிர்ப்பாளர்களுக்கு தனது ஆதரவை வெளியிட்டார்.
ஹானிய்யா தனது உரையில், “நான் அரபுலக வசந்தத்தை அல்லது இஸ்லாமிய இளவேனிற்காலத்தை மதிக்கிறேன். விடுதலை, ஜனநாயகம், சீர்திருத்தம் கோரி போராடும் சிரியா மக்களை சல்யூட் செய்கிறேன்.” என்ற கூறியபொழுது ஜும்ஆவில் கலந்துகொண்ட மக்கள் ‘அல்லாஹு அக்பர்(அல்லாஹ் மிகப்பெரியவன்)!’ ‘சிரியா!சிரியா!’ என முழக்கமிட்டனர்.
ஹமாஸின் தாய் இயக்கமாக கருதப்படும் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்திற்கு சிரியா தடை விதித்திருந்த போதிலும்,ஃபலஸ்தீனில் போராடி வரும் ஹமாஸிற்கு ஆதரவு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் போராளிகளுக்கு சிரியா அடைக்கலமும் அளித்து வந்துள்ளது. இந்நிலையில் சிரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் துவங்கிய பொழுது பஸ்ஸாருல் ஆஸாதின் அரசின் எதிர்ப்பாளர்கள் மீது கொடூரமான அடக்குமுறைகளை கையாண்டு வரும் வேளையில், சிரியா அரசின் நடவடிக்கை ஹமாஸிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஹமாஸிற்கும்-சிரியா ஆசாத் அரசிற்கும் இடையே பல வாரங்களுக்கு முன்பே இடைவெளி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹமாஸ், அண்மையில் காஸ்ஸாவில் வசிப்பவர்கள் ஆசாதிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க அனுமதி அளித்திருந்தது.
ஹானிய்யா உரை நிகழ்த்தும்போது மக்கள் “No Iran, no Hezbollah. Syria is Islamic,” ’ஈரானும் வேண்டாம்!ஹிஸ்புல்லாஹ்வும் வேண்டாம்!’ என முழக்கமிட்டனர். ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் சிரியாவுக்கு ஆதரவளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லாஹ்வின் போராட்டத்தில் அவ்வியக்கம் ஷியா போராளிகளின் அமைப்பாக கருதப்பட்ட போதிலும் சன்னி முஸ்லிம்களின் மத்தியிலும் பெரும் ஆதரவை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரபுலக புரட்சி துவங்கிய வேளையில் அதனை ஆதரித்த ஈரான், சிரியாவில் குறைந்தபட்ச சதவீதத்தை கொண்ட ஷியா அலவிகளின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக துவங்கிய போராட்டத்தை கண்டும்காணாதது போல் நடந்துகொண்டது. அதுபோலவே ஹிஸ்புல்லாஹ்வும் சிரியாவை ஆதரித்து வருகிறது.
இந்நிலையில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிர்ப்பான மனோநிலை அரபுலகில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் கோரும் மக்களுக்கு மத்தியில் ஏற்ப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் ஹமாஸ், சிரியா எதிர்ப்பாளர்களுக்கு அளித்துள்ள ஆதரவாகும்.
அண்மையில் இஸ்மாயீல் ஹானிய்யா ஈரானுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஈரான் ஹமாஸ் அரசுக்கு நிதியுதவியை அளித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
ஹமாஸின் அரசியல் பிரிவைச் சார்ந்த இஸ்ஸத் அல்ரஸ்க் கூறுகையில், “ஈரான் நிதியுதவி அளிக்காவிட்டால் தனது 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு ஹமாஸ் சம்பளம் வழங்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஹமாஸ் சிரியா எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment