Saturday, February 25, 2012

சென்னை என்கவுன்டர் குறித்த தமிழக போலீசாரின் கூற்றில் முரண்பாடு – விசாரணைக்கு நிதீஷ் குமார் உத்தரவு

imagesCAT5RXRL
பாட்னா:சென்னை வேளச்சேரியில் கடந்த வியாழக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பீகார் இளைஞர்கள் குறித்த தமிழக போலீசாரின் தகவல்கள் முரணாக இருப்பதால் அதுகுறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். இந்த விசாரணையை பீகார் மாநில டிஜிபி தலைமையிலான போலீசார் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

என்கவுன்டரில் கொலைச் செய்யப்பட்ட 5 வங்கிக் கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தமிழக காவல்துறை அறிவித்தது. மேலும் கொல்லப்பட்ட இளைஞர்கள் பணத்தை பீகாரில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், பீகாருக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து பீகார் சட்டசபையில் அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவிக்கையில், ‘இந்த விவகாரத்தை மாநில அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றார்.

மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், ‘சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள் குறித்து,தமிழக போலீசார் முன்னுக்குப் பின் முரணாகக் கூறுகிறார்கள். கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சிலர் பீகாரில் உயிருடன் இருக்கிறார்கள். இந்த என்கவுன்டர் குறித்து தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறோம். மேலும் முறையாக விசாரணை நடத்துமாறு மாநில டிஜிபி அபயானந்துக்கு உத்தரவிட்டுள்ளேன். உள்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கெடுப்பார்கள்” என்றார்.

என்கவுண்டர் முறையில் வங்கிக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த தமிழக போலீசாருக்கு இப்பிரச்சனை புதிய தலைவலியாக மாறியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza