லக்னோ:உத்தரப்பிரதேச சட்டப் பேரவைக்கு புதன்கிழமை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 10 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவில் 1.70 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 55 தொகுதிகளில் 862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரபலமான முகங்களும் தங்களின் செல்வாக்கை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த வாக்குப்பதிவில் 2 அமைச்சர்கள், 15 முன்னாள் அமைச்சர்கள், 31 தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் தலையெழுத்தை மக்கள் தீர்மானிப்பர். முக்கிய கட்சிகளான பகுஜன் சமாஜ கட்சி, சமாஜவாதி கட்சி, காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவு நடைபெற உள்ள இடங்களில் 6855 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. மாநில மற்றும் மத்திய அரசுகளைச் சேர்ந்த 2 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களின் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் பிற பகுதியினர் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர்.
காவல் பணியை பொறுத்தவரை மத்திய படையினரிடம் தலைமை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில போலீஸார் அவர்களுக்கு உதவிகரமாக செயல்படுகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment