Friday, February 10, 2012

ஜெ. உறவுக்காக சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விலக சிறப்பு வழக்கறிஞருக்கு பாஜக அரசு நெருக்கடி

B.V.Acharya
பெங்களூர்:தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் B.V.ஆச்சார்யா, தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக ஒருவரே சிறப்பு அரசு வழக்கறிஞராகவும், கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரலாகவும் பதவி வகிக்கக் கூடாது என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும் இந்த இரு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே நீடிக்க முடியும் என கர்நாடக அரசு கூறியதையடுத்து தாம் இந்த முடிவை எடுத்ததாக B.V.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக பாஜக அரசு நிர்பந்தம் செய்தது. இது ஜெயலலிதாவுக்கு சாதகமாக பாஜக அரசு எடுத்துள்ள முடிவாகவே கருதப்படுகிறது. ஆனால், அந்தப் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்ட  B.V.ஆச்சார்யா, தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அரசு தந்த நெருக்கடியைத் தொடர்ந்து, தனது அட்வகேட் ஜெனரல் பதவியை B.V.ஆச்சார்யா நேற்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சதானந்த கெளடாவுக்கு அவர் அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து B.V.ஆச்சார்யா தெரிவிக்கையில்;”ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது. இந்த வழக்கு விசாரணையை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, பாஜகவின் டெல்லி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே கர்நாடக அரசு எனக்கு நெருக்கடி கொடுத்தது.

பாஜக மேலிடத்தின் இந்த நெருக்கடி எடியூரப்பா முதல் அமைச்சராக இருக்கும் வரை எடுபடவில்லை. தற்போது முதல்வர் சதானந்த கெளடா மூலம் அதனை நிறைவேற்ற பாஜக மேலிடம் முயற்சி செய்கிறது.

நான் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி வருவது தெரிந்தும் கூட, மாநில அரசு எனக்கு அட்வகேட் ஜெனரல் பதவியைத் தந்தது.

இப்போது நெருக்கடி கொடுத்தால் நான் சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிடுவேன் என்று கர்நாடக அரசு தப்புக் கணக்கு போட்டுவிட்டது.

அரசு அட்வகேட் ஜெனரல் பதவியை விட, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்த சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பே மேலானது என்று கருதிதான், அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தேன்.”  என்று கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza