மாலி:வெகுஜன எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மாலத்தீவில் அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்ட அதிபர் முஹம்மது நஸீத் பதவி விலகக் கோரி மாலத்தீவில் மக்கள் போராட்டம் வெடித்தது. போலீஸ் ஆதரவு அளிப்பதால் ஒருவார காலமாக நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்தது.
போராட்டம் நடைபெறும் வேளையில் நஸீத், செவ்வாய்க்கிழமை அரசு தொலைக்காட்சி மூலம் மக்களிடம் உரை நிகழ்த்த திட்டமிட்டிருந்தார். போலீஸ் அவரை அனுமதிக்கவில்லை. உரை நிகழ்த்தும் முன்பே போலீஸ், அரசு ஒலிபரப்பு நிலையங்களின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவந்தது. அதிபர் நஸீத் போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கருதப்படுகிறது.
அதேவேளையில், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை தொடர்ந்து முஹம்மது நஸீத் பதவி விலகிவிட்டார் என்றும், துணை அதிபர் முஹம்மது வஹீத் அஹ்மத் பதவி ஏற்றுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால்,ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்ததாக வெளியான செய்தியை அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன.
குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் முஹம்மதை கைது செய்ய முஹம்மது நஷீத் உத்தரவிட்டதை தொடர்ந்து போராட்டங்கள் துவங்கின. அரசு விமர்சகரை விடுதலைச் செய்ய உத்தரவிட்டதுதான் நீதிபதி கைது செய்யப்பட காரணமாகும். ஆனால் நீதிபதி ஊழல் காரணமாக அவரை விடுதலைச் செய்தார் என அரசு கூறுகிறது.
முன்பு மனித உரிமை ஆர்வலராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முஹம்மது நஸீத் நாட்டின் முதல் பல தரப்பு கட்சிகளும் போட்டியிட்ட தேர்தலில் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment