டென்மார்க்:டென்மார்க் தொலைகாட்சியின் நிரூபர்களுக்கு இந்தியா வர விசா மறுக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள இந்திய தூதரகம் டென்மார்க்கின் டேனிஷ் ஒலிபரப்பு நிறுவனத்தைச் சேர்ந்த நிரூபர்களுக்கும் மேலும் இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றவர்களுக்கும் விசா மறுப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த செயல் பத்திரிக்கைச் சுதந்திரத்தை பறிப்பதாக டென்மார்க்கின் பத்திரிக்கையாளர்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தியுள்ளது. டென்மார்க் அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் டென்மார்க் அரசு இந்திய அதிகாரிகளுக்கு பத்திரிக்கை சுதந்திரம் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று டென்மார்க்கின் பத்திரிக்கையாளர்களின் சங்கத்தின் தலைவர் மோகன்ஸ் பலிசேர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து டேனிஷ் ஒலிபரப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தாங்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் பிரச்சனைக்குத் தீர்வை எதிர்பார்த்து இருப்பதாகவும் அதனால் எதுவும் தெரிவிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விசா மறுப்பு அனைத்து டேனிஷ் நிரூபர்களுக்கும் அல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த முறை குறும்படம் எடுக்க டேனிஷ் ஒலிபரப்பு நிறுவனத்தைச் சேர்ந்த நிரூபர்களுக்கு விசா அளித்தபோது அவர்கள் இந்தியா வந்து குறும்படம் எடுக்காமல் இந்தியாவின் வசதியற்ற பகுதிகளை குறித்து நிகழ்ச்சி நடத்தியதாகவும் எனவே கடந்த முறை விதியை மீறியதால் இந்தமுறை விசா மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 31-ம் தேதி விருதுபெற்ற குறும்பட தயாரிப்பாளர் டாம் ஹீன்மன் மற்றும் அவரது துணைவியரும் ஒளிப்பதிவாளருமான லோட்டி லாகலர் ஆகியோருக்கு இந்தியா வர விசா மறுக்கப்பட்டுள்ளதே இவ்விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம். இவ்விவகாரம் டென்மார்க்கின் பத்திரிக்கை உலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எ கில்லர் பார்கெய்ன்(A Killer Bargain) – ஒரு கொலைகார ஒப்பந்தம் என்ற டாக்குமென்ட்ரியை 2005-ல் எடுத்ததால் இந்திய அதிகாரிகள் அவர்களுக்கு விசா அனுமதி மறுக்கின்றனர் எனத் தெரிகிறது.
அந்த டாக்குமென்ட்ரியில் டென்மார்க் மற்றும் ஸ்வீடன் நாட்டு நிறுவனங்கள் அந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்வது பற்றியும் அதன் மூலம் இந்தியாவின் கிராமப் புறங்களில் கேன்சர் என்ற புற்று நோய் அதிகரித்து வருவதைத்தான் அவர் டாக்குமென்ரியாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாங்கள் சுற்றுலா விசா மட்டுமே கேட்டிருந்ததாகவும் மேலும் எந்த பணிநிமித்தமும் இல்லை என்றும் இருந்தும் தங்களுக்கு விசா மறுக்கப்பட்டு உள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்கள் பாஸ்போர்டில் இந்திய விசா மறுக்கப்பட்டுள்ள முத்திரை (VAF-Stamp) இருப்பதால் மற்ற நாடுகளும் தங்களுக்கு மறுத்து வருவதாகவும் தங்களை தீவிரவாதி என்று நினைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் தீவிரவாதிகள் அல்ல சாதாரண பத்திரிக்கைக்காரர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்திய அதிகாரிகளோ இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த முத்திரைக்கு (VAF-Stamp) விசா பெற விண்ணப்பித்துள்ளவர் என்று அர்த்தம் என்றும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment