Tuesday, February 7, 2012

இனி ஒரு போரை பாகிஸ்தானால் தாங்க இயலாது – கிலானி

கிலானி
இஸ்லாமாபாத்:கஷ்மீரின் பெயரால் இனியொரு போரை பாகிஸ்தானால் தாங்க இயலாது என பாகிஸ்தானின் பிரதமர் யூஸுஃப் ரஸா கிலானி கூறியுள்ளார். நான்கு முறை கஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுடன் போர் நடந்துள்ளது. தற்பொழுதும் கஷ்மீர் ஒரு மோதல் பிரதேசமாகவே நீடிக்கிறது என்றார் கிலானி.

கஷ்மீர் ஒற்றுமை தினம் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அன்று பாகிஸ்தானில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பிரச்னைக்குத் தீர்வு கோரி நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கஷ்மீர் பிரச்னை குறித்து விளக்குவதற்காக 1990-ம் ஆண்டு முதல், இந்த நாளை அந்நாட்டின் அரசு கடைப்பிடித்து வருகிறது.

இஸ்லாமாபாதில் உள்ள தலைமைச் செயலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் யூஸுஃப் ரஸா கிலானி பேசியது:

ஏற்கெனவே 4 முறை இந்தியாவுடன் போரிட்டுள்ளோம். 21-ம் நூற்றாண்டில் கஷ்மீருக்காக மற்றொரு போரை பாகிஸ்தானால் தாங்க முடியாது. இந்தப் பிரச்னைக்கு தேசிய அளவிலான கருத்து ஒற்றுமையை ஏற்படுத்துதல், தகுந்த கொள்கைகளை வரையறுத்தல், பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வு காண விரும்புகிறேன் என்றார் கிலானி.

மேலும், கஷ்மீரிகளுக்கு அரசியல் ரீதியாக தொடர்ந்து நாங்கள் ஆதரவளிப்போம். அனைத்துக் கட்சிகள் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் கஷ்மீர் பிரச்னையில் ஒற்றுமையாக உள்ளோம். ஒரு பொறுப்புமிக்க அணு ஆயுத நாடான பாகிஸ்தான், பொறுப்புள்ள கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. கொள்கை முடிவுகளை தனி நபர்கள் அல்ல, மக்கள் பிரதிநிதிகளே மேற்கொள்வர்.

கஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவனர் ஜுல்பிகர் அலி புட்டோவின் அடியைப் பின்பற்றி செயல்படுவோம் என்றார் கிலானி.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza