Monday, February 6, 2012

இனிக்கும் இல்லறம்!

இனிக்கும்இல்லறம்1
இல்லறம் இனிமையாக அமைவதிலும், மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டி எழுப்புவதிலும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை (Give and Take Policy) மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை வகிக்கிறது. இதில் தம்பதியினர் இருவரின் புரிதல்கள் அல்லது உள்வாங்கல்கள் ஆதிக்கம் செலுத்துவதை காணலாம்.

குடும்பத்தில்  ஏதேனும் ஒரு விவகாரத்தில் இருவருக்கும் இடையே வெவ்வேறான புரிதல்கள் நிலவலாம். இதனால் இங்கே கருத்தொற்றுமை ஏற்படாத சூழல் உருவாகும். ஒரு விஷயத்தை குறித்து இருவரும் புரிந்துகொண்டது முரணாக இருந்தாலும் ஒருவர் மற்றவருக்காக சூழல்களை கருத்தில் கொண்டு இறங்கி வருதல் அல்லது இணங்கி வருதல் விட்டுக் கொடுத்தல் எனப்படும்.

கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்தல் என்பதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், ஒருவரின் சுய விருப்பத்தில் தலையிட்டு அதில் தனது கருத்தை திணிப்பதை தவிர்த்தல் அவசியமாகும்.

உதாரணமாக. தனக்கு உரிய ஆடைகளை தேர்வு செய்வதில் மனைவியின் விருப்பத்தில் கணவன் தலையிடுவது அவரது சுயமாக தேர்வுச் செய்யும் சுதந்திரத்தை பாதிப்பதாகும். ஆனால், சமூக நலன், மார்க்க சட்டத் திட்டங்களை கருத்தில் கொண்டு ஆடை விவகாரத்தில் ஆலோசனை கூறுவது அல்லது உபதேசிப்பதை தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவதாக எண்ணிவிடக் கூடாது. இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ஒரு பெண் வெளியே செல்லும் வேளையில் அல்லது அந்நிய நபர்களுக்கு முன்னால் முகம், முன்கை ஆகியவற்றைத் தவிர வேறு எதனையும் வெளியே தெரியும் வகையில் ஆடை அணியக் கூடாது. அதைப் போலவே உள்ளுறுப்புகள் வெளியே தெரியும் வகையில் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. இதுக்குறித்து கணவர் அல்லது பிறரின் உபதேசங்களை ஏற்றுக்கொள்ளும்போது சுய விருப்பத்தின் மீதான அத்துமீறல் என கருதிவிடக் கூடாது. அதைப் போலவே கணவனுக்கு மார்க்க சட்டத்தின் அடிப்படையில் மனைவி உபதேசம் செய்யும் வேளையில் அது தனது தனிப்பட்ட விருப்பத்தின் மீதான அத்துமீறல் என கருதக் கூடாது. ஆகவே மார்க்க சட்டங்களுக்கு உட்பட்ட விடயத்தில்தான் விட்டுக் கொடுக்கும் கொள்கையை குறித்து நாம் அலசப் போகிறோம் என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியம்.

திருமணமான புதிதில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தின் பொது விவகாரங்களில் வெவ்வேறான விருப்பங்கள் இருக்கலாம். இருக்கும். உதாரணமாக உணவு. வீட்டில் பொதுவாகத்தான் உணவை சமைப்பார்கள். கணவனுக்கு மாமிச உணவின் மீது நாட்டம் இருக்கும். அதேவேளையில் மனைவிக்கோ மீன் உணவில் விருப்பம் ஜாஸ்தியாக இருக்கலாம். கணவனுக்கு ரசம் பிடிக்கலாம். மனைவிக்கு சாம்பார் பிடிக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இருவருக்கும் விருப்பமான உணவுகளை தனித்தனியாக சமைப்பதும் சிரமம். இந்நிலையில் என்னச் செய்யவேண்டும்?அங்கேதான் விட்டுக்கொடுத்தல் பாலிசி வேலைச் செய்யவேண்டும்.

பெரும்பாலான வீடுகளில் பெண்கள் தங்களது கணவர்களின் விருப்பத்தை தனது விருப்பமாகவே மாற்றிக்கொள்வார்கள். ஆனால், ஆண்களைப் பொறுத்தவரை தனது விருப்பம்தான் சமையல் உள்பட அனைத்திலும் நிறைவேற வேண்டும் என விரும்புவார்கள். இது ஒரு தவறான போக்கு. இருவரும் பரஸ்பரம் விட்டுக் கொடுப்பதில்தான் இல்லறத்தில் இனிமையே இருக்கிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மாமிசம் புசிக்காத மனைவி, கணவனுக்கு அதை சமைத்துப் போடுவது இந்த விட்டுக் கொடுத்தல் மனப்பாங்கினால் உருவானதே. ஆனால் இங்கு இருவரும் தத்தமது கொள்கைளை அதாவது மனைவி மாமிசம் சாப்பிடுவதுமில்லை, கணவன் அவளை வற்புறுத்துவதுமில்லை என்ற நிலைப்பாட்டினால் குடும்பத்தில் மாமிசம் தொடர்பாக எந்தப் பிரச்சினையும் தலைகாட்ட வாய்ப்பில்லாமல் போகிறது.

விட்டுக்கொடுத்தல் கொள்கை பெண்களின் குறிப்பாக இந்திய பெண்களின் கட்டமைக்கப்பட்ட மனோநிலைக்கு எதிரான காரியங்களுக்கும் பொருந்தும் என பகல் கனவு காணக்கூடாது. தனது கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் புரிய நாடுகிறார் என்பதற்காக மனைவி இவ்விவகாரத்தில் விட்டுக்கொடுப்பார் என கருதுவது மிகவும் சிக்கலான காரியமாகும். 2-வது திருமணம் புரிய மார்க்கரீதியாகவும், தர்க்கரீதியாகவும் காரணங்களை கூறினாலும் இந்திய சமூக சூழலில் வாழும் பெண்ணின் மனோநிலை நிச்சயமாக மறுதலிக்கவே செய்யும். இதில் ஓரிருவர் மாறுபட்டு இருக்கலாம். இஸ்லாம் கூறும் பலதாரமணம் என்பது நிர்பந்தமோ, மார்க்க கடமையோ அல்ல. அது ஒரு அனுமதி மட்டுமே. உடல்ரீதியான வேட்கையை விட சமூகரீதியான காரணிகள் பலதார மணத்தின் முக்கியத்துவத்தை புரியவைக்கிறது. இக்கட்டுரையில் அதனைக் குறித்து ஆழமாக செல்ல விரும்பவில்லை.

கணவனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மனைவி தயாராக இருக்கும் சூழலில் இன்னொரு திருமணம் என்பதை அவளுடைய மனம் ஒப்புக்கொள்ளாது என்பதுதான் உண்மை. 2-வது திருமணம் என வரும் வேளையில், ’சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கமாட்டாள்’ என்ற பெண்ணீயம் அங்கே குறுக்கிடும்.

மார்க்கம்(ஆன்மீகம்), தொழில், குடும்பம் என்ற வட்டங்களில் சமநிலை பேணும் எந்தக் கணவன்-மனைவிக்கும் எப்படியான முரணான உள்வாங்கல்களையும் உதறிவிடல் என்பது சாத்தியமாகும். அதுவே உண்மையான விட்டுக்கொடுத்தல். குடும்ப விட்டுக் கொடுத்தல்களில்; அதிக பங்களிப்பு பெண்களுக்குத்தான் போலிருக்கிறது.

ஆகையால்தான் ‘ஆண்களின் வெற்றிக்கு பெண்களே காரணம்’ என கூறுகிறார்களோ?

‘தான்’ என்ற எண்ணம்தான் விட்டுக் கொடுத்தலுக்கு மிகப்பெரிய எதிரியாகும். இல்லறம் மட்டுமல்ல, மாமியார்-மருமகள் உறவு, வேலைச் செய்யும் இடம் என இங்கெல்லாம் உறவுகள் கெடுவதற்கு இந்த எண்ணம்தான் காரணமாகும்.

இங்கே ஒரு கதையை கவனியுங்கள்…

“ஆரிஃபா ஆபிஸ்ல இருந்து வந்து 15 நிமிஷம் ஆச்சு! இன்னும் காஃபி ரெடியாகலை?” – அன்வரின் குரலில் எரிச்சல் மிகுந்து இருந்தது.

அவசர,அவசரமாக காஃபி டம்ளருடன் சமையலறையில் இருந்து வெளியில் வந்த ஆரிஃபாவுக்கு, “ஆபிஸ்ல இருந்து வழக்கத்தை விட அரை மணிநேரம் முன்னதாகவே வந்தால் காஃபி எப்படி ரெடியாகும்” என கேட்க தோன்றினாலும் அன்வரின் எரிச்சலும், கோபமும் கலந்த முகத்தை பார்த்தவுடன் அடக்கிக்கொண்டாள்.

அலுவலகத்தில் ஏதோ பிரச்சனை என்பதை ஆரிஃபா புரிந்துகொண்டாள்.
“ஆரிஃபா என்ன இது?”

மீண்டும் கணவனின் கோபக்குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள்.

“ஏங்க இப்படி சத்தம் போடுறீங்க! அதான் காஃபி போட்டு தந்தாச்சுல்லே!”
“காஃபியா போட்டிருக்கே! நான் என்ன டயபாடீஸ் நோயாளியா?”

கோபம் தலைக்கேறி டம்ளரை தூக்கி வீசினான் அன்வர். விக்கித்துப்போய் செய்வதறியாது திகைத்து நின்றாள் ஆரிஃபா. அன்வர் காஃபி கேட்டு அவசரப்படுத்தியதில் பதறிப்போய் காஃபியில் சர்க்கரை போட மறந்துவிட்டாள். அன்வரோ சகிப்புத் தன்மையோ, பொறுமையோ இன்றி ஆர்ப்பாட்டம் செய்கின்றான்.

அமைதியாக சொன்னால் அழகான காஃபியை ஆரிஃபா அவனுக்கு தயார் செய்து கொடுத்திருப்பாள். இப்படி காஃபியும் வேஸ்ட் ஆகி இருக்காது. மனைவியின் உள்ளத்தில் வெறுப்பையும் சம்பாதித்திருக்க வேண்டியதில்லை. சரி காஃபியில் சர்க்கரை இல்லையென்றால், அதனை சமாதானமாக கேட்டு இருக்கலாம். எல்லாம் அவசரம். விட்டுக் கொடுத்தல் மனப்பாண்மை, சகிப்புத்தன்மை இன்றி நடந்துகொண்டால் நாளடைவில் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுவிடும். நிம்மதியை இழந்து இல்லறம் கசப்பாக மாறும்.

வாழ்க்கை என்பது நிரந்தரமல்ல, விட்டுக் கொடுத்தால் நாம் இழப்பது எதுவுமில்லை என்பதை புரிந்துகொண்டாலே போதும் வாழ்க்கை இனிக்க துவங்கும். ஒரு சோதனைக்காக இக்கட்டுரையை படிக்கும் தம்பதியினர் இன்றிலிருந்து “தான்” என்ற எண்ணம் தலை தூக்கும்போது அதனை தூக்கியெறிந்துவிட்டு விட்டுக் கொடுத்தலை கடைப்பிடித்து பாருங்கள் – அதன் பலனை உணர்வீர்கள்.

விட்டுக் கொடுத்தலும், சகிப்பு தன்மையும், ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும் இல்லற வாழ்க்கை இனிமையாக மாற இன்றியமையாதவை.

விட்டுக் கொடுத்தல், சகிப்பு தன்மை, தனது இணையின் மகிழ்ச்சியை முக்கியமாக கருதுதல் போன்ற இல்லற வாழ்வின் இனிமைக்கு இன்றியமையததாக விளங்கும் காரணிகளுக்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்…) அவர்கள் திகழ்ந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதே இல்லை. விரும்பினால் அதைச் சாப்பிடுவார்கள் பிடிக்கவில்லை என்றால் அதை விட்டுவிடுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதிலிருந்து தெரிவது என்ன? தனக்கு பிடிக்காத உணவு பிறருக்கு பிடிக்கும் என்றால் அதனை தயாரிப்பதை நபி(ஸல்…)அவர்கள் தடுக்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள் தங்களது மனைவியிடம் ஆணத்தைக் கொண்டு வரக் கூறினார்கள். குடும்பத்தினர் “எங்களிடம் காடி (வினிகர்) மட்டும்தான் இருக்கிறது” என்றனர். நபி(ஸல்) அவர்கள் அதைக் கொண்டு வரச் சொல்லி “காடி மிகச் சிறந்த ஆணம் காடி மிகச் சிறந்த ஆணம்” என்று கூறிக்கொண்டே சாப்பிட்டார்கள். (ஆணம் – குழம்பு) (ஸஹீஹ் முஸ்லிம்)
தங்களது மனைவியிடம் ஏற்படும் சிறிய குறைகளைப் பார்த்து கோபித்துக் கொள்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பாடம் படித்து கொள்ளவேண்டும். உணவு தயாராக தாமதமாகுதல், தான் விரும்பிய உணவை தயாரிக்கவில்லை அல்லது தான் விரும்பிய ருசி இல்லை போன்ற காரணங்களுக்காக கோபப்படும்போது அந்த  மனைவியிடம் அக்குறை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சில சமயங்களில் அவளுக்குச் சில நிர்ப்பந்தங்கள் இருக்கலாம். அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு முன்பே பலர் கோபத்தால் வீட்டில் பூகம்பத்தையே உருவாக்கி விடுகின்றார்கள். இத்தகைய தவறான போக்கால் இல்லறத்தில் அமைதியும், இனிமையும் காணாமல் போய்விடும்.
“நீங்க முன்னமாதிரி அன்பா இல்லை”, “எதற்கெடுத்தாலும் கோபம் உங்களுக்கு”, “இப்பல்லாம் உங்களை புரிஞ்சுக்கவே முடியலை”, “ஆபீஸ் போனாலும் மறக்காம போன் பண்ணுவீங்க இப்பல்லாம் ம்ஹூம்…”, “நான் சாப்பிட்டேனான்னு கூட நீங்க கேக்கறது கிடையாது” – இம்மாதிரியான எதிர்மறை கருத்துக்கள் உங்கள் துணையிடமிருந்து எழும்பொழுது உடனடியாக விழித்துக் கொள்ளுங்கள். மனம் விட்டு பேசுங்கள். இல்லறத்தை சீராக்கி கொள்ளுங்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza