நியூயார்க்:இந்திய எல்லைக்குள் மாடுகளை ஓட்டி வந்த பங்களாதேஷ் வாலிபரை கர்ண கொடூரமாக சித்திரவதைச் செய்த ஈவு இரக்கமற்ற எல்லை பாதுகாப்பு படை ஜவான்கள் எட்டு பேர் மீது விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதி புதன்கிழமை அன்று பங்களாதேஷைச் சார்ந்த இளைஞரான ஹாபு ஷேக் என்ற அப்துல் ஷேக் தனது கிராமத்தைச் சார்ந்த சில நபர்களுடன் மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்த எல்லைப் பகுதியில் வேலிகள் இல்லை. வழக்கமாக இரு நாடுகளை சார்ந்த விவசாயிகளும் மாடுகள் உள்பட வியாபாரத்திற்காக இந்த எல்லையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாடுகளுடன் எல்லைக்குள் நுழைந்த அப்துல் ஷேக் உள்ளிட்ட கிராம வாசிகளை பிடித்த பி.எஸ்.எஃப் படையினர் அப்துல் ஷேக்கை மட்டும் பிடித்து வைத்துவிட்டு மற்றவர்களை பங்களாதேஷிற்குள் விரட்டியுள்ளனர். பின்னர் அப்துல் ஷேக்கை நிர்வாணமாக்கி கனத்த தடியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர் உதவிக்காக கூக்குரலிட்ட பிறகும் யாரும் உதவுவதற்கு வரவுமில்லை. பி.எஸ்.எஃப் ஜவான்கள் அவரை தொடர்ந்து தாக்கியுள்ளனர். அவர் அனுபவிக்கும் வேதனையை பார்த்து ரசித்து சிரித்ததுடன் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இக்காட்சியை பி.எஸ்.எஃப் ஜவான் ஒருவர் வீடியோ பிடித்து அதனை பரப்ப விட்டுள்ளார். இக்காட்சி யூ ட்யூப் இணையதளம் வாயிலாக உலக முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ராமிநகர் காவல் நிலையக்கட்டுப்பாட்டில் உள்ள சார் மவ்ராசி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த எல்லைப் பகுதி பி.எஸ்.எஃபின் 105 பட்டாலியனின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி பி.எஸ்.எஸ் ஜவான்களின் சித்திரவதை குறித்து குறிப்பிடுகையில், ’மனிதத் தன்மையற்றது’ என தெரிவித்தார். அவர் மேற்கு வங்காள டி.ஐ.ஜி நபரஜித் முகர்ஜியிடம், பி.எஸ்.எஃப் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பி.எஸ்.எஃப் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஜவான்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுக்குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகையில், “இச்சம்பவம் மனித உரிமை மீறல்களின் தெளிவான ஆதாரமாக இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட படை வீரர்கள் மீது இதுவரை குற்றம் சுமத்தப்படவில்லை” என தெரிவித்துள்ளது.
கட்லமாரி 2-வது கிராம பஞ்சாயத்தின் தலைவர் முஹம்மது முல்லா கூறுகையில், “இந்தியா-பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் வேலிகள் இல்லை. பி.எஸ்.எஃப் ஜவான்கள் சித்திரவதைச் செய்வது புதிய சம்பவம் அல்ல. உள்ளூர் விவசாயிகள் எப்பொழுதும் இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள். நான் பலமுறை உயர் அதிகாரிகளிடம் பி.எஸ்.எஃப் ஜவான்களின் கொடுமையை குறித்து புகார் அளித்துள்ளேன். ஆனால் பி.எஸ்.எஃப் எதனையும் கண்டுகொள்வதில்லை. இப்பகுதி மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி என்பதால் இங்கு நடக்கும் எந்த சம்பவமும் ஊடகங்களில் இடம் பெறுவதில்லை” என கூறுகிறார்.
சில அரசு சாரா அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் பி.எஸ்.எஃபின் அட்டூழியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்துவருகின்றன.
ஆதிபாசி க்ராமின் ஜனகல்யாண் சமிதியின் ஜஹாங்கிர் ஃபக்கீர் கூறுகையில், “எல்லைப் பகுதியில் பி.எஸ்.எஃபின் நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை கமிஷனுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளேன்” என தெரிவிக்கிறார்.
0 கருத்துரைகள்:
Post a Comment