Wednesday, February 1, 2012

வயது சர்ச்சை:ராணுவமே காரணம் – மத்திய அமைச்சர் ஏ.கெ.அந்தோணி

ஏ.கெ.அந்தோணி
புதுடெல்லி:ராணுவ தளபதி வி.கே.சிங்கின் வயது தொடர்பான சர்ச்சை ஏற்படுவதற்கு ராணுவத்தின் செயல்பாடுகளே காரணம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி குற்றம் சாட்டினார்.

தளபதி ராணுவத்தில் சேரும்போது அளித்த வயதுச் சான்றிதழின் இரண்டு படிவங்களை 36 ஆண்டுகளாக வைத்திருந்ததால்தான் இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. முதலிலேயே எந்த வயதை எடுத்துக் கொள்வது என்று தீர்மானித்து அதைப் பின்பற்றியிருந்தால் இத்தகைய குழப்பம் ஏற்பட்டிருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

ராணுவத்தில் செயல்படும் இரண்டு பிரிவுகள் தனித்தனியே வெவ்வேறு வயதுச் சான்றிதழை 36 ஆண்டுகளாக வைத்துள்ளன. இதனால்தான் இப்போது பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்தப் பிரச்னை இப்போது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் முதல் முறையாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ஏ.கே.அந்தோனி இத்தகைய விளக்கத்தை அளித்துள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக ராணுவத்தின் இருவேறு பிரிவுகள் ஒரே நபரின் வேறுபட்ட சான்றிதழை நிர்வகித்துள்ளன. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதற்காக ராணுவத்துக்கும் சிவிலியன்களுக்கும் கருத்து வேறுபாடு முற்றிவிட்டதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.

இந்த விஷயத்தில் அரசுக்கு எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. வயது விவகாரம் முதலில் 2006-ம் ஆண்டுதான் வெளிச்சத்துக்கு வந்தது. இதையும் முதலில் ராணுவத் தலைமையகம்தான் கண்டுபிடித்தது. பின்னர் 2008-ம் ஆண்டு இந்த விவகாரம் தலைதூக்கியது.

2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ராணுவ தலைமையகம் இந்தஇருவேறுபட்ட வயது சான்றிதழை நிர்வகித்து வந்துள்ளது. இதில் ராணுவ தலைமையகம் அளித்த பரிந்துரையைத்தான் அரசு ஏற்றுக் கொண்டதே தவிர, எந்த வித ஆலோசனையையும் அரசு அளிக்கவில்லை. இந்த விஷயத்தில் ராணுவம் எடுத்த முடிவைத்தான் அரசுக்குத் தெரியப்படுத்தியது. அப்போது நான் அமைச்சராக இல்லை. இருப்பினும் அப்போது இது தொடர்பாக ராணுவம் அளித்த பரிந்துரை அடிப்படையிலேயே அரசு முடிவு செய்தது.

2008-ம் ஆண்டு இந்த பிரச்னை மீண்டும் வந்தபோது ராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் தீபக் கபூர், அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டது. 2006 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் ராணுவம் அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டது. இதைத் தவிர ஒரு அரசால் வேறு என்ன செய்ய முடியும்? என்று அந்தோனி கேள்வியெழுப்பினார்.

2009-ம் ஆண்டு ராணுவ தலைமையகம் இந்த விஷயத்தில் அனைத்து பிரச்னையையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக அரசு கருதியது. ஆனால் மீண்டும் 2011-ல் இந்தப் பிரச்னை எழுந்தது. அப்போது சட்ட அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி அரசு மூன்று முடிவுகளை எடுத்தது. அரசு இப்படித்தான் செயல்பட்டாக வேண்டுமே தவிர, வேறு வழி கிடையாது. ஆனால் அரசின் முடிவை இப்போது உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இந்த விஷயத்தில் நாம் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். இது மீண்டும் மீண்டும் எழாமலிருக்க வேண்டும். இந்த பிரச்னை அரசின் கைகளை மீறிச் சென்றுவிட்டது. இதில் எத்தகைய தீர்ப்பு வந்தாலும் அதை ஏற்கத்தான் வேண்டும். உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புதான் இறுதி முடிவு என்றார் அந்தோனி.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza