Wednesday, February 8, 2012

பா.ஜ.க ஆட்சிக்காலத்தின் 2 ஜி ஆவணங்கள் மாயம்!

2G case
புதுடெல்லி:பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் போது தனியார் நிறுவனங்களுடன் டெலிகாம் துறை நடத்திய  2ஜி லைசன்ஸ் ஒப்பந்த ஆவணங்களை காணவில்லை. பா.ஜ.க அரசு நடத்திய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணையை சி.பி.ஐ தீவிரப்படுத்தியுள்ள சூழலில் லைசன்ஸ் ஒப்பந்த ஆவணங்கள் மாயமாகியுள்ளன.

ஒரேயடியாக கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும், கோப்புகளை பரிசோதித்து வருவதாகவும், காலம் தாழ்த்தாமல் அளிக்கப்படும் என்றும் தொடர்புடைய அலுவலகத்தின் அண்டர் செகரட்டரி சி.பி.ஐ டி. எஸ்.பிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2001-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தனியார் நிறுவனங்களுடன் டெலிகாம் துறை செய்த லைசன்ஸ் ஒப்பந்தம் பரிசோதனைக்காக அளிக்கவேண்டும் என சி.பி.ஐ கோரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் பாரதி டெலிநெட், ஏர்செல் ஆகிய நிறுவனங்களுடன் நடத்திய ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஹட்ச், ஸ்டெர்லிங் செல்லுலார், பி.பி.எல், ஐடியா ஆகிய நிறுவனங்களுடன் நடத்திய லைசன்ஸ் ஒப்பந்தங்கள் காணாமல் போயுள்ளன ஸ்டெர்லிங் செல்லுலார் தற்பொழுது வோடாஃபோன் – எஸ்ஸார் மொபைல் என அழைக்கப்படுகிறது.

ஐ.மு அரசின் நம்பிக்கையை தகர்த்த 2ஜி முறைகேடு பா.ஜ.கவையும் வேட்டையாடும் என்ற அறிகுறி சி.பி.ஐ வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. மறைந்த பிரமோத் மகாஜன், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ ஆட்சியில் டெலிகாம் அமைச்சராக பதவி வகித்தார்.

2001-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளில் ஸ்பெட்க்ட்ரம் ஒதுக்கீடு மூலமாக அரசு கருவூலத்திற்கு 508 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐயின் ஆரம்ப கட்ட அறிக்கை கூறுகிறது. மரணமடைந்துவிட்டதால் பிரமோத் மகாஜனை வழக்கில் சேர்க்கவில்லை என்றாலும், அக்காலக்கட்டத்தில் டெலிகாம் செயலாளர் ஷியாம்லால் கோஷ், துணை இயக்குநர் ஜெனரல் ஜே.கே.குப்தா, டெலிகாம் சேவை நிறுவனங்களான ஏர்செல், வோடாஃபோன் ஆகியோர் மீது முறைகேடு தொடர்பான வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அவசரமாக அதிகமான ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் அனுமதி வழங்கியதில் மகாஜன் குற்றவியல் சதித்திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ குற்றம் சாட்டுகிறது.

இதற்கிடையே, உச்சநீதிமன்ற உத்தரவின் படி 2ஜி வழக்கில் விசாரணையை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதிக்க சி.பி.ஐ இயக்குநர் எ.பி.சிங் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் பிரதீப் குமாரை சந்தித்து பேசினார்.

தொடர் விசாரணை விஜிலென்ஸ் கமிஷனரின் கண்காணிப்பில் நடைபெறவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza