புது டெல்லி: ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கின் பிறந்த ஆண்டை 1950 ஆக திருத்தம் செய்யுமாறு ராணுவ அலுவலகத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதன் மூலம் ராணுவ தளபதியுடன் சமரசமாகச் செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதையும், பேச்சுவார்த்தைக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன என்பதையும் மத்தியஅரசு பகிரங்கமாக உணர்த்தியுள்ளது. இது ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் ஊதியம், ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை துணை ராணுவ தளபதி (அட்ஜுனண்ட் ஜெனரல்) அலுவலகம் பராமரிக்கிறது. வீரர்களின் பணித் தகுதி, பதவி உயர்வு ஆகியவை தொடர்பான ஆவணங்களை ராணுவ செயலகப் பிரிவு பராமரிக்கிறது. இந்த இரண்டு அலுவலகங்களிலும் தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் பிறந்த தேதியில் முரண்பட்ட தகவல்கள் உள்ளன.
துணை ராணுவ தளபதி அலுவலக ஆவணத்தில் அவர் 1951-ல் பிறந்தார் என்றும் ராணுவ செயலகப் பிரிவு ஆவணத்தில் 1950-ல் பிறந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக வி.கே.சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதால் அவருடன் சுமுகமாகச் செல்வதை மத்திய அரசு விரும்பவில்லை. இந்தப் பிரச்னையை சட்டரீதியாக எதிர்கொள்ளவும் அரசு இப்போது தயாராகி வருகிறது. இதற்காக துணை ராணுவ தளபதி அலுவலக ஆவணங்களில் தலைமைத் தளபதியின் பிறந்த ஆண்டை 1950 ஆக திருத்தம் செய்யுமாறு அந்த அலுவலகத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையிலேயே, தளபதியின் பிறந்த ஆண்டை 1950 ஆக திருத்துமாறு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், துணை ராணுவ தளபதி அலுவலகம் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. தளபதியின் பள்ளிச் சான்றிதழில் அவரது பிறந்த ஆண்டு 1951 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையும் அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ராணுவ அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக மத்தியஅரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இந்தமுறை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் என்று தெரிகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment