புதுடெல்லி:வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை குறித்து பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி தெரிவித்தார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நிலுவையில் இருக்கும் தேர்தல் சீர்திருத்தங்களை விரைந்து அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேர்தலில் தகுதியான வேட்பாளர்கள் போட்டியிடவில்லை எனில் அவர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தத் திட்டத்தை முழுமனதுடன் வரவேற்றுள்ள குரேஷி, இதனை பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.
குற்றப் பின்னணி உடையவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவதை அரசியல் கட்சிகள் அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார். தேர்தல் செலவுகளுக்கு மாநிலஅரசுகளே நிதியளிக்க வேண்டும் என்ற யோசனையில் எனக்கு உடன்பாடில்லை. இதன் மூலம் தேர்தலில் கறுப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் என்னால் ஏற்க முடியவில்லை. இந்த நடைமுறையில், தேர்தலில் பணபலத்தின் ஆதிக்கம்தான் அதிகமாகும் என்று குரேஷி கருத்து தெரிவித்தார்.
வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் நிராகரித்தார். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. ஆனால், அவை பெயரளவில் மட்டுமே உள்ளன. இதனால், கோடிக்கணக்கான வழக்குகள் குவியும். இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது மிகவும் கடினம் என்று அவர் விளக்கமளித்தார். தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னரே அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.
வாக்குப் பதிவுக்கு 48 மணிநேரத்துக்கு முன்பாக அனைத்து வகையான தேர்தல் விளம்பரங்களுக்கும் இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாளிதழ் விளம்பரங்களுக்குத் தடை இல்லை. அதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். இதன் மூலம்தான் வாக்காளர்களுக்கு பணம், மதுபானங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் குரைஷி தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment