புதுடெல்லி:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன(இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்பட 4 விஞ்ஞானிகளின் கருத்துகளைக் கேட்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் வி. நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் மேலும் கூறியது: சர்ச்சைக்குரிய ஆண்ட்ரிக்ஸ் – தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அரசுப் பணிகளில் நீடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள மாதவன் நாயர், பாஸ்கர நாராயணா, கே.ஆர்.ஸ்ரீதரமூர்த்தி, கே.என்.சங்கரா ஆகிய விஞ்ஞானிகளின் கருத்துகளைக் கேட்க மத்திய அரசு தயாராக உள்ளது. அவர்கள் மீதான தடை நீக்கப்படுமா என்பது குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது. அவர்கள் தங்கள் நிலை என்ன என்பதை முதலில் கூறட்டும். விஞ்ஞானிகளின் கருத்து என்ன என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு ஆர்வமாய் உள்ளது என்றார் நாராயணசாமி.
இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ், விதிகளை மீறி தனியார் நிறுவனமான தேவாஸுக்கு எஸ்பாண்ட் அலைவரிசைகளை ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இதை விசாரிக்க உயர்நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையை மற்றொரு குழு ஆராய்ந்தது. இதனைத் தொடர்ந்து, மாதவன் நாயர் உள்பட 4 விஞ்ஞானிகள் அரசுப் பணிகளில் நீடிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தவறாக நடக்கும் விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் கடுமையான சமிக்ஞை இது என நாராயணசாமி முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment