Monday, January 30, 2012

மனித உரிமை மீறல்களை தடுப்பதில் இந்தியா தோல்வி – ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

Indian human rights disappointing HRW

நியூயார்க்:மனித உரிமை மீறல்களை தடுப்பதில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் கஸ்டடி மரணங்களும், போலீஸ் சித்திரவதைகளும் அதிகரித்துள்ளது. சிறுபான்மை மக்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்திய அரசு தோல்வியை தழுவியுள்ளது என்று மனித உரிமைகளைக் குறித்த 2011 ஆம் ஆண்டு அறிக்கையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த திங்கள் கிழமை இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஜம்மு-கஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள் ஆகியவற்றில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பாதுகாப்பு அதிகாரிகள் பெரும்பாலும் பாதுகாக்கப்படுகிறார்கள். மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபடுவோர் ஒரு போதும் தண்டனையில் இருந்து தப்பிக்க இடம் அளிக்கக் கூடாது. சித்திரவதைகளுக்கு பின்னால் யார் செயல்படுகின்றார்கள் என்பது தெளிவான பிறகும் அவர்களை விசாரணைச் செய்வதில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.

அதேவேளையில் இந்தியா-பங்களாதேஷ் எல்லை பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை(பி.எஸ்.எஃப்) நடத்தும் கொலைகள் குறைந்துள்ளன.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம்(AFPSA) வாபஸ் பெறுவதற்கான முயற்சிகளை ராணுவம் தடுக்கிறது. ஆயிரக்கனக்கான கஷ்மீரிகள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? என்பது கூட அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் 2,730 இறந்த உடல்கள் அடையாளம் காணப்படாமல் கடந்த ஆண்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும், மனித உரிமை கவுன்சிலிலும் உறுப்பினரான இந்தியாவின் குரலுக்கு சர்வதேச அளவில் செல்வாக்கு இருந்தாலும் இலங்கை, சிரியா, மியான்மர், சூடான் ஆகிய நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை குறித்து மெளனம் சாதித்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza