புதுடெல்லி:உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தன. வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியுள்ளது.
பஞ்சாபில் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1087 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு காங்கிரசும், சிரோமணி அகாலிதளம்-பா.ஜ.க கூட்டணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆளும் பாரதிய ஜனதா-சிரோமணி அகாலிதளம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான பிரகாஷ் சிங் பாதல், காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அம்ரீந்தர் சிங் ஆகியோர் களம் காணும் வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.
காங்கிரஸ், பாஜக – சிரோமணி அகாலிதளம் கூட்டணி, பகுஜன் சமாஜ கட்சி ஆகியன அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பாட்டியாலா, கிட்டர்பாஹா, லம்பி, போலாத், மஜிதா ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் மிகவும் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை தவிர 32 தொகுதிகள் பதற்றம் நிறைந்த தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் வன்முறைகள் நிகழாமல் தடுக்க பஞ்சாப் மாநில போலீஸ் தவிர 200 கம்பெனி துணை ராணுவப் படைகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 815 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில் பாஜகவுக்கும் காங்கிரஸூக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
1,794 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 1,252 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின் போது, 14 ஆயிரம் லிட்டர் மதுவும், ரூ. 1.4 கோடி பணமும் கைப்பற்றப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் பாதுகாப்புக்காக 75 கம்பெனி மத்திய துணை ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment