காபூல்:ஆஃப்கானில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிற்கு அடுத்து பாகிஸ்தானும் தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பேச்சுவார்த்தை நடத்த ஹினா ரப்பானி புதன்கிழமை ஆஃப்கானிஸ்தானிற்கு செல்வார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹினா ரப்பானியின் வருகை இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க செய்யும் என ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜனான் முஸஜாஇ கூறினார். ஆஃப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸல்மெய் ரசூலுடனும் ஹினா ரப்பானி பேச்சுவார்த்தை நடத்துவார்.
தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் அதிபரும், ஆப்கான் சமாதான குழு தலைவருமான புர்ஹானுத்தீன் ரப்பானியின் கொலையை தொடர்ந்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் இருந்து வாபஸ் பெற்றது. புர்ஹானுத்தீனின் கொலையின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என குற்றம் சாட்டிய ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதாக கூறியிருந்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் இருந்து வாபஸ் பெற்றது.
இதற்கிடையே, கத்தரில் தாலிபான் – அமெரிக்கா அதிகாரிகள் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. இரு பிரிவினர்களுக்கு இடையே தன்னம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரை அளிப்பது குறித்து கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. கைதிகள் பரிமாற்றம் உள்பட தாலிபான் கோரிக்கைகளும் இதில் அடங்கும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக கத்தர் அரசின் உயர்மட்ட குழு ஆஃப்கான் செல்லும். பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக கத்தரில் தாலிபான் அலுவலகத்தை நேற்று முன்தினம் திறந்தது.
அதேவேளையில் கர்ஸாய் சவூதி அரேபியாவில் வைத்து தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவுச் செய்துள்ளதாக பி.பி.சி கூறுகிறது. பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் என்றும், தாலிபான் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளதாகவும் ஆஃப்கான் வட்டாரங்களை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment