டமாஸ்கஸ்:இரண்டு தினங்களாக தொடர்ந்த கடுமையான போராட்டத்திற்கு பிறகு ராணுவம், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் சுற்று வட்டார பகுதிகளை எதிர்ப்பாளர்களிடமிருந்து கைப்பற்றியது.
சனிக்கிழமை துவங்கிய போராட்டத்தில் டமாஸ்கஸின் சில பகுதிகளை எதிர்ப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். ஆனால், நேற்று காலை கவச வாகனங்கள், டாங்குகளுடன் நுழைந்த ராணுவம் எதிர்ப்பாளர்களை விரட்டியடித்தது. தலைநகரில் கூடுதலான ராணுவ வீரர்களை களமிறக்கி டமாஸ்கஸின் கட்டுப்பாட்டை முழுமையாக தங்கள் வசம் ராணுவம் கொண்டுவந்தது. பின்னர் ராணுவம் வீடுகள் தோறும் ஏறி மக்களை கைது செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மோதலில் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. சிரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அரபு லீக்கின் கண்காணிப்பாளர்கள் சனிக்கிழமை தங்களது பணியை நிறுத்திவிட்டதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரு பிரிவினரும் தாக்குதலை வலுப்படுத்தினர். வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு சிரியாவில் கட்டுப்பாடு நிலவுவதால் உண்மையான செய்திகள் வெளியாகவில்லை.
நேற்றும் தலைநகரில் துப்பாக்கிச் சத்தங்களும், குண்டு சத்தங்களும் கேட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை 3 குழந்தைகள் உள்பட 64 பேர் பல்வேறு பகுதிகளில் கொல்லப்பட்டனர்.
டமாஸ்கஸின் அருகில் உள்ள கஃபர் பத்னா, ஸக்பா, ஹமூரியா, ரங்கூஸ், ஸபாதனி, ஹர்ஸதா ஆகிய இடங்களில் மரணித்தவர்கள் குறித்து செய்தி வெளியாகி உள்ளது. தெற்கு மாகாணமான தேராவில் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த இரண்டு மாணவர்களை ராணுவம் கொலை செய்துள்ளது.
இதற்கிடையே, எதிர்ப்பாளர்களின் ஆதிக்கம் மிகுந்த ஹும்ஸில் ஆயுத குழுக்கள் எரிவாய் குழாயை குண்டுவீசி தகர்த்தனர். லெபனானின் எல்லைப் பகுதியில் நடந்த இத்தாக்குதலில் 450,000 க்யூபிக் மீட்டர் எரிவாயு கசிந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment