டமாஸ்கஸ்:அரசு ஆதரவு ராணுவத்திற்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வலுத்துள்ள சிரியாவில் பரிசோதனை நடத்திவரும் அரபுலீக்கின் கண்காணிப்புக் குழுவின் பணியை முடித்துக் கொண்டதாக அரபு லீக் அறிவித்துள்ளது. இத்தகவலை அரபுலீக்கின் பொதுச் செயலாளர் நபீல் அல் அரபி தெரிவித்துள்ளார்.
கண்காணிப்புக் குழு சிரியாவில் தொடர்ந்து இருக்கும். ஆனால், பரிசோதனை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 தினங்களில் சிரியாவில் அரசு ஆதரவு ராணுவத்தினருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஏறத்தாழ 100 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே நேற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
சிரியா பிரச்சனைக்கு தீர்வு காண ஐ.நாவின் ஆதரவை கோரி அரபுலீக்கின் பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு புறப்பட தயாராகும் வேளையில் சிரியாவில் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. புரட்சி ராணுவத்தின் தாக்குதலில் ஏழு அரசு ஆதரவு ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி ஏஜன்சி கூறுகிறது.
சிரியா ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 17 நபர்களின் இறந்த உடல்கள் கவனிப்பாரற்று கிடந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே சிரியா பிரச்சனைக்குத் தீர்வு காண அரபு-ஐரோப்பிய நாடுகளின் தலைமையிலான நகல் தீர்மானம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற விவாதம் நடைபெற்றது. தீர்மானத்தை வீட்டோ செய்வோம் என ரஷ்யாவும், சீனாவும் அறிவித்துள்ளன.
சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகவேண்டும் என்பது அரபுலீக் முன்வைத்த திட்டமாகும். ஆனால், இத்திட்டம் நாட்டின் இறையாண்மையின் மீதான அத்துமீறல் என சிரியா கூறுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment