Sunday, January 29, 2012

மாதவன் நாயருக்கு ஆதரவாக சி.என்.ஆர் ராவ்

C.N.R. Rao
பெங்களூர்:இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் மீதான நடவடிக்கைக்கு பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் சி.என்.ஆர்.ராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எஸ்-பேண்ட் ஒதுக்கீடு தொடர்பாக இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்டிரிக்ஸ் மற்றும் தனியார் நிறுவனமான தேவாஸ் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு காரணமானவர்களாகக் கருதப்படும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகளை, இனிவரும் காலங்களில் அரசின் எந்தவொரு திட்டத்திலும் பணியாற்ற நியமிக்கப் போவதில்லை என்ற முடிவை மத்திய அரசு அறிவித்தது.

அரசின் இந்த முடிவை நியாயப்படுத்திய பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி, “எந்த ஒரு தவறையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற கடுமையான செய்தியை விஞ்ஞானிகளுக்குத் தெரிவிக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதுத்தொடர்பாக பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழு தலைவரும், பெங்களூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கெளரவத் தலைவருமான சி.என்.ஆர்.ராவ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பது:

குப்பையைத் தூக்கி வீசுவது போல, இஸ்ரோவில் பணியாற்றி நாட்டுக்கு நீண்ட காலமாக சேவை செய்தவர்களை அரசு நடத்துகிறது.

அதே சமயம் ஊழல் புரிந்த அரசியல்வாதிகளை இது போன்று நடத்துவதில்லை.

விஞ்ஞானிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? இதுபோன்று நடத்தினால், இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் பணியாற்ற யாரும் முன்வரமாட்டார்கள்.

மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, விஞ்ஞானிகள் குறித்து இதுபோன்று பேசக்கூடாது. அவர் தனது அடிப்படைக் கல்வியை எங்கு கற்றார் என்று தெரியவில்லை” என்றார் சி.என்.ஆர்.ராவ்.

சி.என்.ஆர்.ராவின் கருத்து குறித்து ஜி.மாதவன் நாயர் கூறியது: “பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் போன்றவர்களின் ஆதரவுக்கு நன்றி. பிரச்னையின் தீவிரத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர்” என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza