இம்பால்:மணிப்பூரில் நேற்று நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தகவலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பி.சி. லாம்குங்கா தெரிவித்துள்ளார்.
ஒன்பது மாவட்டங்களில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்த அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 17 லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்களில் 82 சதவீதம் பேர் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே வாக்குப்பதிவின் போது நடந்த வன்முறைகளில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர். சுக்னு பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட டாம்பி வாக்குச் சாவடி மையத்தில் வாக்காளர்போல் வரிசையில் ஊடுருவிய நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் சி.ஆர்.பி.எப். வீரர், கிராம காவல் படையைச் சேர்ந்த 3 பேர், ஒரு வாக்காளர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு வாக்காளர் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
சாகோல்பந்த் தொகுதியில் சக்தி வாய்ந்த வெடிக்குண்டுகளை போலீஸார் கண்டுபிடித்து செயலிழக்க செய்தனர். இதனால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது. திபைமுக் தொகுதியில் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு இயந்திரத்தை வன்முறையாளர்கள் காலையில் சேதப்படுத்தினர்.
மாநிலம் முழுவதும் 2,357 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 875 சாவடிகள் வன்முறை நிகழ வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தன. 12,967 தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநில போலீஸாரைத் தவிர 350 கம்பெனி படைகளும், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 270 வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
60 தொகுதிகளில் தேர்தல்: மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. களத்தில் 279 வேட்பாளர்கள் உள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment