புதுடெல்லி:நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா தலைமையிலான மொழி-மத சிறுபான்மையினருக்கான் தேசிய கமிஷனின் சிபாரிசின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு நகல் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில் இந்திய 20-வது மாநாடு ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. அதனையொட்டி மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் அரசியல் நகல் தீர்மானத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட் வெளியிட்டு செய்தியாளர்களிடையே பேசினார்.
அவர் வெளியிட்டுள்ள அரசியல் நகல் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:
நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா தலைமையிலான தேசிய கமிஷனின் சிபாரிசின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மேல்தட்டு பிரிவினரை தவிர்த்துவிட்டு இந்த இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும்.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அட்டவனைப்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டிற்கு சமமானதாக இந்த இட ஒதுக்கீடு அமையவேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாமல் பொது பிரிவில் இருந்து முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இடஒதுக்கீடு 50 சதவீதத்தை விட அதிகரிக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு உரிய அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினருக்கு அளித்தது போலவே முஸ்லிம்களுக்கும் மத்திய அரசின் திட்ட விகிதத்தில் இருந்து துணை திட்டம் அனுமதிக்க வேண்டும். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளின் வளர்ச்சிக்கு தனியாக நிதி ஒதுக்கவேண்டும்.
இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் முஸ்லிம்கள் பாரபட்சமாக கைது செய்யப்படுவதும், சித்திரவதைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆளாக்கப்படும் சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது.
துனீஷியா மற்றும் எகிப்து மக்களின் எழுச்சி அங்கிருந்த எதேச்சதிகார அரசாங்கங்களைத் தூக்கி எறிந்துள்ளன. ஃபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தி வருகிறது. ஆயினும் ஃபலஸ்தீனர்களின் இயக்கம் முன்பை விட இப்போது மேலும் ஒன்றுபட்டிருக்கிறது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் இன்னும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதன் பாதிப்புகள் கடுமையாக உள்ளன. இந்நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த சமூக நலத் திட்டங்கள் பல வெட்டப்பட்டுள்ளன. இப்போது சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் வேலைகள் இழப்பு, ஊதிய இழப்பு அதிகரித்துள்ளன. பலர் வீடுகளை இழந்து விட்டனர்.
மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்திருப்பதை அடுத்து, இந்நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்கமும், இளைஞர்களும், மாணவர்களும் போராட்டப் பாதைகளில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் நடைபெறும் ‘வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்’ இயக்கம், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள் இவற்றின் எதிரொலியேயாகும்.
உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து ஐ.மு.கூட்டணி அரசாங்கம் பாடம் கற்றுக்கொள்ளாமல் நவீன தாராளமயக் கொள்கைகளையே தொடர்ந்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்க்க முயற்சிக்கிறது. எண்ணெய் வளங்கள், எரிவாயு மற்றும் சுரங்கங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்திட முயல்கின்றன.
ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தில் உயர்மட்ட அளவிலான ஊழல் அதிகரித்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், கேஜி பேசின் மற்றும் ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த ஊழல் என வளர்ந்து கொண்டே இருக்கிறது.
அயல் நாடுகளில் கள்ளத்தனமாக நிதியைப் போட்டு வைத்திருப்பது என்பதும் அதிகரித்திருக்கிறது. கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்கான முயற்சி எதையும் அரசாங்கம் உணர்வுபூர்வமாக எடுக்கத் தயாராயில்லை.
விலைவாசியைக் குறைத்திட உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்க ஐ.மு.கூட்டணி அரசாங்கம் தவறிவிட்டது. விவசாய நெருக்கடி தொடர்வதால் விவசாயிகளின் தற்கொலைகளும் தொடர்கின்றன.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவை எதிர்க்க ஒரு இடது-ஜனநாயக மாற்று கூட்டணி உருவாக்கப்படும்.’ இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment