லக்னோ:உ.பி சட்டப்பேரவைக்கு நடைபெற இருக்கும் முதல் கட்ட தேர்தலில் 109 கிரிமினல்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்த 867 வேட்பாளர்களில் 287 பேரின் மனுவை பரிசோதித்த பொழுது இவர்களில் 109 பேர் மீது கொலை, கடத்தல், வழிப்பறி ஆகிய வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. உத்தரபிரதேச மாநில தேர்தல் கண்காணிப்பு குழு வேட்புமனுக்களை பரிசோதித்தது.
கிரிமினல் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களில் சமாஜ்வாதி கட்சிக்கு முதலிடம். 28 பேர் இக்கட்சி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பா.ஜ.க சார்பாக 24 பேர் வீதமும், காங்கிரஸிற்கு 15, பீஸ் கட்சிக்கு 12, ஜெ.டி.யு கட்சிக்கு 5 கிரிமினல் வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை புரிய தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
284 வேட்பு மனுக்களை பரிசோதித்த பொழுது 144 கோடீஸ்வரர்கள் போட்டியிடுவது தெரியவந்தது. 12.08 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் அஜய் பிரதாப் சிங் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சவுதரி ரவீந்திர பிரசாத் 6.56 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் சுக்ராம் சிங் 5.5 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
284 பேரில் 96 பேர் வருமான வரி செலுத்தவில்லை. வருமான வரியை செலுத்தாத கோடீஸ்வர வேட்பாளர்களில் முன்னணி வகிப்பவர் சமாஜ்வாதி கட்சியைச் சார்ந்தவர்.ஃபரீத் மஹ்ஃபூஸ் கித்வாய்க்கு 3.52 கோடி சொத்துக்கள் உள்ளன. 2.88 கோடி ரூபாய் சொத்துக்களுடன் காங்கிரஸ் கட்சியின் கவுரி சங்கரும், 2.57 கோடி ரூபாய் சொத்துக்களுடன் பா.ஜ.கவின் ராம்ஸஜீவனும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 867 வேட்பாளர்களில் 65 பேர் பெண்கள் ஆவர்.
0 கருத்துரைகள்:
Post a Comment