Saturday, December 3, 2011

புஷ்ஷை கைது செய்ய ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆம்னஸ்டி கோரிக்கை

wanted

லண்டன்:மனித உரிமை மீறல்களை நடத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷை கைதுச்செய்ய ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, தான்சானியா, ஜாம்பியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கோரிக்கை விடுத்துள்ளது.

புஷ் இம்மாதம் அந்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வருகையில் கைது செய்யவேண்டும் என ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக புஷ் பதவி வகித்த வேளையில் மனித உரிமை மீறல்களுக்கு தலைமை வகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் இக்கோரிக்கையை ஆம்னஸ்டி விடுத்துள்ளது.

கொடுமைகளுக்கு தலைமை வகித்தவர்கள் சுதந்திரமாக நடமாடுவது
சர்வதேச சட்டங்களுக்கு உகந்தது அல்ல. ஆதலால் புஷ்ஷை கைது செய்வதற்கான பொறுப்பை ஆப்பிரிக்க நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என ஆம்னஸ்டியின் சட்ட ஆலோசகர் மாட் பொல்லார்ட் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முகத்தை துணியால் கட்டிவிட்டு கைதிகளின் முகத்தில் தண்ணீரை அடிக்கும் வாட்டர் போர்டிங் போன்ற சித்திரவதைகளை செய்வதற்கு புஷ் தலைமை தாங்கியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தால் ஜார்ஜ் w புஷ் இவ்வருடம் சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்துச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza