அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகள் அநியாயமாக மோடியின் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியை கொலைச்செய்ய வந்த லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் என பொய் குற்றம் சாட்டி இஷ்ரத் ஜஹான், ஜாவேத் குலாம் ஷேக், அக்பர் அலி ராணா, ஜிஸான் ஜோஹர் அப்துல் கனி ஆகியோரை மோடியின் போலீஸ் அநியாயமாக சுட்டுக்கொன்றது. ஆனால் இச்சம்பவம் போலி என்கவுண்டர் என முன்னர் இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் தமாங் கண்டறிந்தார்.
தனது அப்பாவியான மகளை குஜராத் போலீசார் அநியாயமாக குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றதாக இஷ்ரத்தின் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை குஜராத் போலீசார் நியாயமாக விசாரிக்கமாட்டார்கள் என்பதால், சி.பி.ஐ இவ்வழக்கை விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
ஆனால், சிபிஐ விசாரணைக்கு நரேந்திர மோடி அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இதையடுத்து இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை கடந்த நவம்பர் 18ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், 19 வயது கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என்ற பிராணேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஸான் ஜோஹார் ஆகியோர் போலீசாரால் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் இஷ்ரத் ஜஹான் சம்பவம் நடந்த அன்று மரணமடையவில்லை. மாறாக அதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டு விட்டார். உடலை அந்த இடத்தில் கொண்டு வந்து போட்டு, என்கவுண்டர் போல காட்டிவிட்டனர். இது என்கவுண்டர் மரணம் அல்ல, மாறாக கொலையே ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்றிருந்த மூத்த குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சதீ்ஷ் வர்மாவும் இது போலியான என்கவுண்டர் தான் என்று நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து இன்று குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு புதிய குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த என்கவுண்டர் வழக்கு சாதாரணமானதல்ல, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விவகாரமாகும். மேலும் இந்த வழக்கில் குஜராத் போலீசாரை நம்பிப் பயனில்லை. அவர்கள் நியாயமான விசாரணையை நடத்துவார்களா என்பது சந்தேகமே. இதனால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு விரைவிலேயே தாக்கல் செய்யவுள்ள புதிய குற்றப்பத்திரிக்கையில், 20 போலீஸ் குஜராத் அதிகாரிகளின் பெயர்களையும் சேர்க்கவுள்ளதாகத் தெரிகிறது.
இதில் ஏற்கனவே இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் வன்சாரா(இவர் தான் இந்த நால்வரையும் சுட்டுக் கொன்ற போலீஸ் படைக்கு தலைமை தாங்கியவர்), பாண்டே (இவர் இந்த என்கவுண்டரை மேற்பார்வை செய்தவர்) ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என கருதப்படுகிறது.
குஜராத்தில் நடந்து சிபிஐக்கு மாற்றப்படும் 4வது போலி எண்கெளன்டர் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர், துளசி பிரஜாபதி போலி என்கவுண்டர், சித்திக் ஜமால் போலி என்கவுண்டர் ஆகிய வழக்குகளையும் நீதிமன்றங்கள் குஜராத் போலீசாரை நம்பாமல் சிபிஐக்கு மாற்றின. இப்போது இஷ்ரத் ஜஹான் போலி எண்கெளன்டர் வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment