புதுடெல்லி:சில்லறை வியாபாரத் துறைகளில் அந்நிய முதலீடு தீர்மானத்தை வாபஸ்பெற்று பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுத்தொடர்பாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அந்நிய முதலீடுகளை சில்லரை வியாபரத்துறைகளில் அனுமதிப்பதன் நோக்கம் வால்மார்ட், டெஸ்கோ போன்ற சர்வதேச அளவிலான சூப்பர் மார்க்கெட் வியாபாரிகளை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு ஆகும்.
எந்த வகையிலான வெளிநாட்டு முதலீடு மற்றும் பெரும் கார்ப்பரேட் மயமாக்கல் ஆகியன கிராமீய, விவசாய, வேலைவாய்ப்பு துறைகளையும், கலாச்சாரத்தையும் மோசமான முறையில் பாதிக்கும். கிராமங்களை சார்ந்து வாழும் வறுமையில் உழலும் நாடான இந்தியாவிற்கு சோசியலிஸமும், காந்தியக் கொள்கையின் முன்மாதிரியும்தான் வெற்றிகரமாக அமையும். பிற கொள்கைகள் சிலருக்கு மட்டும் அதிகாரத்தையும், பதவிகளையும் அளிக்கக் கூடியது. இத்தகைய கொள்கைகள் மற்றும் அவற்றின் எதிர்கால விளைவுகளை குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை முன்னேற்றும் கொள்கைதான் நமக்கு தேவை. பாராளுமன்ற கூட்டம் நடக்கும் வேளையில் கேபினட் அமைச்சரவை வெளிநாட்டு முதலீடு குறித்து தீர்மானம் எடுத்தது சரியல்ல. பாராளுமன்றத்தில் விவாதித்த பிறகே தீர்மானம் மேற்கொண்டிருக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடு பெருமளவில் சிறு வியாபாரிகளின் தொழில் நஷ்டம் அடைவதற்கு காரணமாகும். வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்த அனைத்து நாடுகளின் நிலைமை இதுவாகும்.
2002-ஆம் ஆண்டு ஆட்சியில் அமரும் வேளையில் வெளிநாட்டு முதலீட்டிற்கு ஆதரவு தெரிவித்த பா.ஜ.க தற்பொழுது எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் இரட்டை வேடமாகும். வெளிநாட்டு முதலீடு தீர்மானத்தை வாபஸ் பெற்ற பிறகு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடக்கும் ஆரோக்கியகரமான விவாதத்திற்கு பிறகே இக்காரியத்தில் தீர்மானம் எடுக்கவேண்டும். இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment