Sunday, December 4, 2011

ஜே டே கொலை:குற்றப்பத்திரிகை தாக்கல்

jede

மும்பை:பத்திரிகையாளர் ஜோதிர்மயி டேயின் கொலை வழக்கில் மும்பை போலீஸ் மோக்கா (மஹராஷ்ட்ரா ஒருங்கமைவு குற்றம் தடை சட்டம்) நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்துள்ளது.

நிழலுக தாதா சோட்டாராஜன் உள்பட 12 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகள் ஆவர். ஆனால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள ஏசியன் ஏஜ் பத்திரிகையின் டெபுட்டி பீரோ சீஃப் ஜிக்னா வோராவின் பெயர் 3055 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை. வோராவின் பங்கினை விவரிக்கும் துணை குற்றப் பத்திரிகை பின்னர் தாக்கல் செய்யப்படும் என போலீஸ் கூறியுள்ளது.

மிட் டே பத்திரிகையின் க்ரைம் பத்திரிகையாளர் ஜே டேவை கடந்த ஜூன் 11-ஆம் தேதி மும்பையில் வைத்து சோட்டா ராஜனின் கும்பலை சார்ந்தவர்கள் சுட்டுக் கொலைச் செய்தனர். சோட்டா ராஜன் குற்றவாளிக்கு ஐந்து லட்சம் ரூபாய் அளித்தார் என போலீஸ் கூறுகிறது.

தங்கப்பன் ஜோஸஃப் என்ற சதீஷ் காலியா என்பவர்தாம் ஜே டேவை சுட்டார் என குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ரோஹி தங்கப்பன், சதீஷ் காலியா, அபிஜித் ஷிண்டே, அருண் தக், சச்சின் கெய்க்வாட், அனில் வாக்மோட், நிலேஷ் சஞ்சய், மகேஷ் அக்வானே, வினோத் அஸ்ராணி, பால்ஸன் ஜோஸஃப், தீபக் சிசோடியா, வோரா உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோட்டா ராஜன் மற்றும் நயன் சிங் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை. 176 சாட்சிகளின் பெயர்களும், சிலரின் வாக்குமூலமும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza