Thursday, December 8, 2011

இஸ்லாமிய வங்கியல்: ஏற்றுக்கொள்ள மறுக்கும் அணுகுமுறையை இந்தியா மாற்றவேண்டும் – முதஸ்ஸிர் சித்தீகி

 

புதுடெல்லி:இஸ்லாமிய நிதி நிறுவனங்களை ஒப்புக்கொள்ள மறுக்கும் அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும் என பிரபல பொருளாதார நிபுணர் முதஸ்ஸிர் சித்தீகி கூறியுள்ளார்.

ஐ.எம்.எஃப், உலக வங்கி ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களில் இஸ்லாமிய வங்கிக் குறித்த ஆலோசகராக சித்தீகி செயல்படுகிறார். இஸ்லாமிய வங்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என நீதிமன்றமே தெரிவித்த நிலையில் ரிசர்வ வங்கி மட்டுமே இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இயலும் என அவர் கூறினார்.

இந்திய செண்டர் ஃபார் இஸ்லாமிக் ஃபினான்ஸ் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றினார் சித்தீகி.

அப்பொழுது அவர் கூறியது:’அரபு-இஸ்லாமிய நாடுகளை தவிர பிரிட்டன், பிரான்சு, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய நிதியியல் வங்கிகள் வெற்றிகரமாக நடந்துவருவதை மத்திய அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.

அடிப்படை வசதிகள் துறையில் பெரும் முதலீடு இந்தியாவுக்கு தேவையாகும். இந்தியாவிலும், சீனாவிலும் பெருமளவிலான முதலீடுகளை செய்ய அரபு நாடுகள் விரும்புகின்றன. ஆனால், பொருளாதார துறையில் தார்மீக நிபந்தனைகளை கடைப்பிடிக்கும் கட்டமைப்பு இல்லாதது அரபு நாடுகள் முதலீடு செய்ய தடையாக அமைந்துள்ளது.’ என சித்தீகி தெரிவித்தார்.

வங்கிகளின் தேசியமயமாக்கல் நடந்து 40 ஆண்டுகள் கழிந்த பிறகும் நாட்டின் 60 சதவீத மக்களின் வங்கி நடவடிக்கைகள் வெளியே நடக்கிறது என இந்தியன் செண்டர் ஃபார் இஸ்லாமிக் ஃபினான்ஸ் பொதுச்செயலாளர் ஹெச்.அப்துல் ரகீப் தெரிவித்தார்.

ஏழை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு முன்னால் மாற்று பொருளாதார துறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் முஸ்லிம் சமுதாயத்தை இந்திய வங்கிகள் புறக்கணிக்கின்றன என சச்சார் கமிட்டி அறிக்கை கூறுகிறது. இஸ்லாமிய வங்கியியல் கட்டமைப்பின் மூலமாக சேவைகளை அனுபவிப்பவர்கள் பிற சமூகங்களை சார்ந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர் என பல்வேறு நாடுகளின் அனுபவங்களை சுட்டிக்காட்டி அப்துல் ரகீப் விளக்கமளித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza