புதுடெல்லி:அநியாயமாக கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு மத்திய பிரதேச அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜபல்பூரைச் சார்ந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஹர்தீஃப் சிங்கிற்கு 20 வருடங்களுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் ஜபல்பூர் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவேண்டும் என்ற ஹர்தீஃப் சிங்கின் கோரிக்கையை நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஃப்ரீ மெடிக்கல் தேர்வுக்கு மூன்று கேள்வித் தாள்களை மாணவர்களுக்கு விற்பனைச்செய்ய பணம் கேட்டதாக குற்றம் சாட்டி 1992-ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஹர்தீஃப் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து ஹர்தீஃப் சிங்கின் கைகளில் விலங்கிடப்பட்ட காட்சியுடன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஹர்தீஃபை கைது செய்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவருடைய சகோதரி மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவ்வழக்கின் விசாரணையின் இறுதியில் 10 வருடங்களுக்கு பிறகு ஹர்தீஃப் சிங் நிரபராதி என கண்டறிந்ததை தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
போதிய ஆதாரங்கள் இல்லாமல் தன்னை கைது செய்ததாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தவேண்டும் என ஹர்தீஃப் சிங் உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் உயர்நீதிமன்றம் 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி உத்தரவிட்டது. அரசு அதிகாரிகளை விசாரணைச் செய்யும் கோரிக்கையை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து ஹர்தீஃப் சிங் உச்சநீதிமன்றத்தை அணுகினார். 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு மனுதாரர் அனுபவித்த அவமானத்திற்கு ஈடாகாது என கூறிய உச்சநீதிமன்றம் 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கினால் தான் நீதி கிடைத்துள்ளது என்ற எண்ணம் அவருக்கு ஏற்படும் என தனது உத்தரவில் கூறியது.
0 கருத்துரைகள்:
Post a Comment