Saturday, December 3, 2011

முல்லைப் பெரியார்:நீர்மட்டம் உயர்வதற்கும் பாதுகாப்பிற்கும் சம்பந்தமில்லை – கேரள அட்வக்கெட் ஜெனரல்

mullaperiyar

கொச்சி:’முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று கேரள உயர் நீதிமன்றத்தில் இம்மாநில அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார். இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் இருப்பதால், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளன. இதை விசாரித்த நீதிபதிகள் மஞ்சுளா, ராமச்சந்திரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இது பற்றி விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி,  கேரள அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் கே.பி. தண்டபாணி நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்துக்கும், அணையின் பாதுகாப்புக்கும் சம்பந்தம் இல்லை. அணை உடைந்தாலும் அந்த தண்ணீரை தாங்கும் பலத்தை இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகள் கொண்டுள்ளன. இப்போது 136.5 அடி தண்ணீர் இருப்பதால் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தினாலும் அணைக்கு ஆபத்து ஏற்படாது.

அணை பகுதியில் ஏற்படும் நிலநடுக்கம்தான் கவலை அளிக்கிறது. நீர்மட்டத்தை 120 அடியாக குறைத்தாலும், 140 அடியாக உயர்த்தினாலும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அணை உடையும். பழமையான அணை என்பதுதான் பிரச்னை. அணை உடையும் ஆபத்து ஏற்பட்டால் இடுக்கி, செறுதோணி, குளமாவு அணைகளுக்கு தண்ணீரை திறந்து விடலாம். அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் அரபிக்கடலுக்கு சென்று விடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை பரிசீலித்த நீதிபதிகள், ‘நீர்மட்டம் பிரச்னையல்ல என்றால் மக்கள் எதற்காக பயப்படுகிறார்கள்?’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த தண்டபாணி, ‘பத்திரிகைகள் இந்த விஷயத்தை  பூதாகரமாக்குவதால்தான் மக்கள் பீதி அடைந்துள்ளனர்’ என்றார். இதையடுத்து, விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முல்லைப் பெரியார் அணை உடைந்தால் எவ்வளவு இழப்பு ஏற்படும்?, எத்தனை பேர் மரணிப்பார்கள்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனைக் குறித்து ஆராயவில்லை என அட்வக்கெட் ஜெனரல் பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து அணைத் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, அணைக்கட்டு விவகாரத்தில் கவலையை தெரிவித்த நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தினை அறிவிக்க உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு கூறி வரும் நிலையில், உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்த அறிக்கையால், கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை பதவியில் இருந்து நீக்கும்படி எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், ஆளும் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza