Wednesday, November 30, 2011

மக்கள் நலப்பணியாளர்கள்: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது? – உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி

dsc
டெல்லி:தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமன விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளது.

முந்தைய தி.மு.க அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களை எல்லாம் தற்போதைய ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு முடக்கி வருகிறது.சட்டப்பேரவை கட்டிடம், சமச்சீர் கல்வி, கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவற்றில் ஜெ.அரசின் நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமச்சீர் கல்வி, நூலகம் தொடர்பாக தமிழக அரசின் உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட 15 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கம் செய்வதாக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஏ.ஆர். தேவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் குருகிருஷ்ணகுமார், “உரிய விதிமுறைகளின் கீழ் மக்கள நலப் பணியாளர்களின் நியமனம் நடைபெறவில்லை. ஏற்கெனவே கிராமங்களில் நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ள 12,000 ஊராட்சிப் பணியாளர்கள் உள்ளனர். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை இவர்கள் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் தவிர மேலும் 5,200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் வைத்திருப்பதால் அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.

அரசுப் பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே ஊராட்சிப் பணியாளர்கள் இருக்கும் நிலையில், அரசுக்கு அதிக செலவு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் (மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம்) இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று வாதாடினார்.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: மக்கள் நலப் பணியாளர்களை ஒரு அரசு நியமிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் மற்றொரு அரசு, அவர்களைப் பணியில் இருந்து நீக்குகிறது. பின்னர் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்று 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம், மக்கள் நலப் பணியாளர்களை நீக்குவதும், பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கும் சம்பவமும் நடைபெறுகிறது. தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? சட்டத்தை சிறிதளவாவது மதிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza