சென்னை:முந்தைய தி.மு.க அரசின் மீதான மக்கள் எதிர்ப்பலையில் ஆதாயம் பெற்று ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
பெரும்பாலான மக்களால் பாராட்டப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க நினைத்து உச்சநீதிமன்றம் வரை ஜெயலலிதா அரசு சென்ற பிறகும் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. சென்னை கோட்டூர் புரத்தில் 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற திட்டமிட்ட முட்டாள்தனமான நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் கருத்து வெளியிட்டது.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நியமிக்கும் மக்கள் நலப்பணியாளர்களை அ.இ.அ.தி.மு.க அரசு கழற்றிவிடுவது வாடிக்கை. அதேப்போல கடந்த தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களையும் பணி நீக்கம் செய்வதாக ஜெ.வின் அரசு திடீர் உத்தரவை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் நலப்பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பணி நீக்கம் செய்யும் அரசு உத்தரவுக்கு இடைக்கால தடையை விதித்தது. எனினும் மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் தமிழ அரசு பணியில் சேர்க்கவில்லை.
இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் இன்று பணியில் சேர்க்கவேண்டும் எனவும், அதன் விபரத்தை புதன் கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment