புதுடெல்லி:பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 1999-ஆம் ஆண்டு கார்கிலில் நடந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆயுதங்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கான பணத்தை ஊழல் புரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நிலைப்பாட்டை அங்கீகரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஊழல் வெளியாகி 12 ஆண்டுகள் கழிந்த பிறகும் இதுவரை ஒருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசால் இயலவில்லை என இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அஃப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது. அரசியல் மனோதிடம் இல்லாமைதான் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என திரிவேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். போர் உபகரணங்கள் வாங்கியதில் கோடிக்கணக்கான பண மதிப்பில் முறைகேடு நடந்ததாக கம்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. விசாரணையை நீதிமன்றம் இம்மாதம் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
‘ஆபரேசன் விஜய்’ என்ற பெயரில் கார்கிலில் நடந்த ராணுவ நடவடிக்கை தொடர்பான முறைகேடுகள் குறித்து தாக்கல் செய்த பொதுநலன் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. கஷ்மீரில் ராணுவ நடவடிக்கை முடிவடைந்த பிறகுதான் 2,163 கோடி ஒப்பந்தத்தில் 75 சதவீத ஆயுதங்களும் வாங்கப்பட்டுள்ளன. எனவே இது ராணுவ நடவடிக்கைக்கு உதவுவதற்காக அல்ல என்பது நிரூபணமாகிறது என சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 35 ஒப்பந்தங்களில் சி.ஏ.ஜி முறைகேடுகள் நடந்ததாக கண்டுபிடித்த போதிலும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த ராணுவம் அனுமதி அளிக்கவில்லை.
0 கருத்துரைகள்:
Post a Comment