Wednesday, November 30, 2011

லோக்பால்:மீண்டும் உண்ணாவிரதம் – ஹஸாரே மிரட்டல்

imagesCAOSOEL9
புதுடெல்லி:லோக்பால் மசோதா குறித்து பாராளுமன்ற குழு தயார் செய்த வரைவு அறிக்கை நாட்டு மக்களை ஏமாற்றுவதாகும் எனக் கூறியுள்ள அன்னா ஹஸாரே அடுத்த மாதம் 27-ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை துவக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கு முன்னோடியாக அடுத்த மாதம் 11-ஆம் தேதி ஜந்தர்மந்தரில் தர்ணா நடத்தப்போவதாகவும் ஹஸாரே அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நான் உண்ணாவிரதம் இருந்தபோது, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்துள்ளது. ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கையில், எங்களின் கோரிக்கைகள் இடம் பெறவில்லை. இதன் மூலம், அரசு எங்களுக்கு துரோகம் செய்துவிட்டது. கடுமையான விதிமுறைகளுடன் கூடிய லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால், ராம்லீலா மைதானத்தில் இவ்வாண்டின் எனது 3-வது உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும். பாராளுமன்றம் அளித்துள்ள உறுதிமொழியை பாராளுமன்ற குழு மதிக்கவில்லை.” என அவர் கூறியுள்ளார்.

ஹஸாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில்; ‘ஹஸாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அவரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வரைவு மசோதாவில், ஹஸாரேயின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரியவந்துள்ளது. அரசுத்துறைகளில் கீழ் மட்டத்தில் பணியாற்றுவோர் தான், பெரும்பாலான ஊழலுக்கு காரணமாக உள்ளனர்.

 அவர்களை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வராவிட்டால், இந்த மசோதாவால் எந்த பயனும் ஏற்படாது. அரசு சாரா தொண்டு நிறுவனங்களையும், மீடியாக்களையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவருவதால், பெரிய அளவில் குழப்பம் ஏற்படும். இதற்கு பதிலாக, வேறு சட்ட விதிமுறைகளை ஏற்படுத்தலாம்’ என அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza