கெய்ரோ:ராணுவ நடவடிக்கையில் சிரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள்காட்டி இச்செய்தியை அல்ஜஸீர் வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை ரஸ்தானில் ஃப்ரீ சிரியன் ஆர்மியின் மையங்கள் மீது சிரியா ராணுவம் தாக்குதலை நடத்தியது. இப்பகுதியில் பல நாட்களாக எதிர்ப்பாளர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய நெடுஞ்சாலையை மீட்டதாக ராணுவம் கூறுகிறது. இங்கு நடந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் அமைதி திட்டத்தை அங்கீகரிக்க சிரியாவுக்கு மேலும் ஒரு தினம் கால அவகாசத்தை அரபு லீக் வழங்கியுள்ளது. இவ்விவகாரத்தில் இன்று தீர்மானம் எடுக்கவில்லை எனில் பொருளாதார தடை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரியங்களில் அரபு லீக் முடிவெடுக்கும். எதிர்ப்பாளர்கள் மீதான ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர பரிந்துரைக்கும் அமைதி திட்டத்தை சிரியா அரசு நிராகரித்த சூழலில் இப்பிரச்சனையை குறித்து விவாதிக்க நடந்த அரபு லீக்கின் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.
சிரியாவில் நடக்கும் மோதல் பிராந்தியம் முழுவதிலும் பிரச்சனைக்கு வழி வகுக்கும் என துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னர் சிரியா அரபு லீக்கிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது. சிரியாவில் நடக்கும் பிரச்சனைகளை கண்காணிக்க 500 பேர் கொண்ட குழுவை அனுமதிக்க அரபு லீக் கோரிய பொழுது அதனை நிராகரித்த சிரியா அக்குழுவின் எண்ணிக்கையை 40 ஆக குறைக்கவேண்டும் என கூறியது. ஆனால், அதனை அரபு லீக் நிராகரித்துவிட்டது.
இதற்கிடையே சிரியாவில் உள்ள அமெரிக்க குடிமக்களிடம் தாயகம் திரும்ப அந்நாடு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க குடிமக்களை அழைத்துச்செல்ல அமெரிக்க போர் கப்பல் மத்திய தரைக்கடல் பகுதிக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment