Tuesday, November 22, 2011

தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் தீவிரம்: மரண எண்ணிக்கை 35 ஆக உயர்வு

1121-Egypt-protests-Tahrir-Square_full_380
கெய்ரோ:ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து விரைவில் அதிகாரத்தை சிவில் அரசிடம் ஒப்படைக்கக்கோரி எகிப்தில் துவங்கிய போராட்டம் மூன்றாம் நாளான நேற்று மேலும் தீவிரமடைந்துள்ளது.

முன்னர் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலக காரணமாக இருந்த மக்கள் புரட்சியின் மையமான தஹ்ரீர் சதுக்கத்தில் போலீசாரும், எதிர்ப்பாளருகளும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 35 பேர் மரணித்துள்ளதாகவும், சதுக்கத்தில் போர் சூழல் நிலவுவதாகவும் அல்ஜஸீரா தெரிவிக்கிறது. 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தலைநகரான கெய்ரோவிலும் வடக்கு நகரமான அலெக்ஸாண்ட்ரியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. பல இடங்களிலும் பாதுகாப்பு அதிகாரிகளும், எதிர்ப்பாளர்களும் மோதலில் ஈடுபட்டனர். முபாரக்கின் ராஜினாமாவிற்கு பிறகு நடைபெறவிருக்கும் ஜனநாயக ரீதியிலான முதல் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே மீதமுள்ள நிலையில் எகிப்தில் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் மோதல் உருவாகியுள்ளது. இம்மாதம் 28-ஆம் தேதி எகிப்தில் ஜனநாயகரீதியில் பொது தேர்தல் நடைபெற உள்ளது.

சதுக்கத்தில் இருந்த போராட்டக்காரர்கள் மீது போலீஸும், ராணுவமும் ரப்பர் புல்லட்டும், கண்ணீர் புகையும் பிரயோகித்தன. போராட்டம் தொடர்பாகவும், போலீஸின் அடக்குமுறைகள் தொடர்பாகவும் ஊடகங்களிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளும், புகைப்படங்களும் அடங்கிய பேனர்களை போலீஸ் தீ வைத்து கொளுத்தியது. ஞாயிற்றுக்கிழமை மதியம் தஹ்ரீர் சதுக்கத்திலிருந்து எதிர்ப்பாளர்களை போலீஸ் விரட்டிய பொழுதும் மீண்டும் இரவில் திரண்ட எதிர்ப்பாளர்கள் சதுக்கத்தின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவந்தனர்.

கெய்ரோவில் உள்துறை அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு அருகிலும் இதர முக்கிய நகரமான நியூஸிலும், இஸ்மாயிலியாவிலும் மோதல்கள் நடந்தன.

இதற்கிடையே, புதிய தாக்குதல்களின் பின்னணியில் கலாச்சாரத்துறை அமைச்சர் இமாத் அபு காஸி ராஜினாமா செய்துள்ளார். தாக்குதல் சம்பவங்களில் அரசுக்கு பொறுப்பு உண்டு என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza