Saturday, October 8, 2011

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பை ஆராய உயர் மட்ட நிபுணர் குழு: தமிழகப் பிரதிநிதிகளிடம் பிரதமர் தகவல்

Man_801925f
புதுடெல்லி:கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்வதற்கு உயர் மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தன்னைச் சந்தித்த தமிழகப் பிரதிநிதிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்தார்.

கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் மாநில நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசியல் கட்சி குழுவும்,  போராட்டக்குழுவும் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், கூடங்குளம் பிரச்னையில் தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் கூடங்குளம் மக்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழகக் குழு முன்வைத்தது.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசியல் கட்சி குழுவினரும், போராட்ட குழுவினரும் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் அளித்தனர்.

பிரதமர் மன்மோகன் சிங், கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான தமிழகக் குழுவின் கருத்துக்களை கவனமுடன் கேட்டறிந்தார்.

பின்னர், நாட்டின் வளர்ச்சிக்கு மின் சக்தியின் தேவை எந்த அளவுக்கு இன்றியமையாததாக விளங்குகிறதோ, அதே அளவுக்கு மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரமும் முக்கியமானது என்று எடுத்துரைத்து, இந்தப் பிரச்னையை ஒரே கூட்டத்தில் தீர்த்து விட முடியாது என்றும் ,
எனவே , மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய ஒரு கூட்டுக் குழு உருவாக்கப்படும்.

அந்தக் குழு கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னை குறித்து விரிவாக ஆராயும் என்றும் தமிழகக் குழுவிடம் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

அத்துடன், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முழுமையான பணிகள் நடக்கவில்லை என்றும், தற்போது பராமரிப்பு பணிகள் மட்டுமே தொடர்கிறது என்றும் பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தத் தகவலை தமிழகக் குழுவில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza