Saturday, October 8, 2011

மூன்றாவது வாரத்தை கடந்த ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம்

wallstreet_bailout_protest-April-2011
நியூயார்க்:அமெரிக்காவில் ‘வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

நேற்று நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது.

நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.

நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza