Sunday, October 2, 2011

சஞ்சீவ் பட்டை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

Sanjeev_Bhatt_Article
அகமதாபாத்:நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்த குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது. அவரை நீதிமன்றக் காவலில் சிறை வைக்க உத்தரவிடப்பட்டது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட குஜராத் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் ஆவணங்களை தாக்கல் செய்தவர்.

அந்த வழக்கு ஆவணத்தில் அவர் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது கே.டி.பந்த் என்ற போலீஸ் ஒட்டுநரால் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சஞ்சீவ் பட் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீஸார் சோதனையும் நடத்தினர்.
சஞ்சீவை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க குஜராத் போலீஸ் முடிவு செய்தது. ஆனால், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி மறுத்தது.

இதனிடையே, தன் கணவரை போலீஸார் அடித்தே கொன்று விடுவார்கள் என்று அச்சம் எழுந்துள்ளதாக டிஜிபிக்கு அவருடைய மனைவி சுவேதா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “என் கணவரை கைது செய்தவுடன், போலீஸ் நிலைய லாக்-அப்பில் வைத்திருந்தனர். பிறகு, கிரைம் பிராஞ்ச் போலீஸிடம் ஒப்படைத்தனர். கிரைம் பிராஞ்ச், முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள பிரிவு. மேலும், அவர்கள் என்கவுண்ட்டர் செய்வதில் வல்லவர்கள். எனவே, என் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை கடுமையாக அடித்து உதைத்து கொன்று விடுவார்கள் என்று அச்சமாக உள்ளது. என் கணவருக்கும் அந்த அச்சம் உள்ளது.

என் கணவரை நானோ, வக்கீல்களோ சந்திக்க போலீஸார் அனுமதிக்கவில்லை. அவருடன் எந்த தகவல் தொடர்பும் இல்லை. பிறகு எப்படி நாங்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியும்?

எனவே, இப்பிரச்னையில் தலையிட்டு நீதி வழங்குமாறு, டி.ஜி.பி. சித்தரஞ்சன் சிங், அகமதாபாத் போலீஸ் கமிஷனர் சுதிர் சின்கா, உள்ளூர் கோர்ட் தலைமை மாஜிஸ்திரேட் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளேன். குஜராத்தில் எங்களுக்கு நீதி கிடைக்காது. உண்மை பேசியதற்காக, என் கணவர் தண்டிக்கப்பட்டுள்ளார்,” என்று சுவேதா கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza