Sunday, September 25, 2011

“என் தந்தைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்!”: ஆயிஷா கதாபி வேண்டுகோள்

aisha-daughter-gaddafi
திரிப்போலி:லிபிய அதிபர் கதாபியின் மகள் ஆயிஷா கதாபி தன் தந்தை இன்னும் வீர தீரத்துடன் தன் சகாக்களுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும், அவருக்கு முழு ஆதரவு தரவேண்டும் என்றும் லிபிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 4 நிமிடம் அவர் பேசிய ஒலிப்பதிவு நேற்று தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்பட்டது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் கதாபியின் ஆதிக்கத்திலிருந்து லிபியா விடுபட்டுப்போன பின் முதன் முதலாக அவருடைய மகள் ஆயிஷா கதாபி தன் தந்தைக்காக ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார். 

இப்பொழுது நாட்டைக் கைப்பற்றியுள்ளவர்கள் நாட்டின் துரோகிகள் என்று வர்ணித்த ஆயிஷா, இவர்களில் சிலர் என் தந்தையின் அரசவையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

“கதாபிக்கு வாக்குறுதி கொடுத்து துரோகம் இழைத்தவர்கள் உங்களுக்கும் துரோகம் இழைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?” என்று அவர் லிபிய மக்களை நோக்கிக் கேட்டார்.

முன்பே பதிவு செய்யப்பட்ட இந்த உரை அல் ராய் தொலைக்காட்சியில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அல் ராய் தொலைக்காட்சி கதாபிக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு வருகிறது. திரிப்போலி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தபொழுது முதன்முதலாக கதாபியின் மகனும், கதாபியின் ஆட்சியில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியவருமான ஸைஃபுல் இஸ்லாமின் உரை இதே அல் ராய் தொலைக்காட்சியில்தான் வெளியானது.

லிபியா வீழ்ந்ததும் ஆயிஷா, அவருடைய தாயார், அவருடைய இரண்டு சகோதரர்கள் ஆகியோர் அல்ஜீரியாவுக்குள் அடைக்கலம் புகுந்தனர். கதாபியின் இருப்பிடம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

“நான் உறுதி கூறுகின்றேன். அவர் நலமாக உள்ளார். இறைவிசுவாசியான அவர் வீர உணர்வுகளுடன் உள்ளார். துப்பாக்கியை ஏந்தி தன் சக போராளிகளுடன் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்” என்று ஆயிஷா தன் தந்தை கதாபி பற்றி அந்த உரையில் குறிப்பிட்டார்.

லிபியாவின் சிங்கங்கள் சிலிர்த்தெழ வேண்டும் என்றும், அதே போல பிற நகர மக்களும் எழுச்சிப் பெற வேண்டும் என்றும், நாட்டின் புதிய ஆட்சியாளர்களுக்கெதிராகப் போராட வேண்டும் என்று அவர் தன் உரையில் வேண்டுகோள் விடுத்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza