ரமல்லா(மேற்குகரை):ரமல்லா மற்றும் நப்லுஸ் ஆகிய இடங்களில் ஃபலஸ்தீனத்தை ஐநா அங்கீகரிக்க கோரி பல்லாயிரக் கணக்கானோர் வீதியில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக் காரர்களின் ஊர்வலம் அமெரிக்க அதிபர் ஒபாமா ஃபலஸ்தீனத்தை பற்றி உரையாற்றும் ஒரு மணி நேரத்திற்கு முன் ஆரம்பம் ஆனது. இப்போராட்டம் ஃபலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகளின் ஆத்திரத்தை கிளறியுள்ளது.
தன்னுடைய உரையில் ஒபாமா இஸ்ரேலுக்கு ஆதரவு தரும் விதமாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதும் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வுக்கு வழிசெய்யும் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுக் குறித்து அல்ஜசீரா தொலைகாட்சி நிரூபர் கால் பெர்ரி ரமல்லாவிலிருந்து நேற்று செப்டம்பர் 21 ஆம் தேதி நடந்த போராட்டம் பற்றி கூறுகையில் ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நியூயார்க்கில் பேச்சு வார்த்தை நடைபெறுவது தெரியும் என கூறியுள்ளார்.
மேலும் ஆயிரக்கணக்கானோர் ரமல்லாவிலுள்ள அரபாத் சதுக்கத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர். சில பள்ளிகளும் வியாபாரத் தளங்களும் மூடப்பட்டு மாணவர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர் என கூறியுள்ளார்.
மேலும் நப்ளுசில் ஊர்வலக்காரர்களில் சிலர் ஒபாமாவுக்கு இது சிறப்பான நாள் என்றும் அவர் தங்களை வேதனைபடுத்த மாட்டார் என்றும் தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தனர்.
ஒபாமா தன்னுடைய உரைக்கு பிறகு ஃபலஸ்தீனத்தின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேலின் அதிபர் நெதன்யாகுவையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒபாமா அப்பாஸிடம் தன்னுடைய கோரிக்கையை திரும்ப பெறுமாறு கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒபாமாவின் இந்நிலை ஃபலஸ்தீனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஃபலஸ்தீனத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா மற்ற நாடுகளின் ஆதரவை தடுப்பது தங்களுக்கு ஆச்சர்யம் அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ஃபலஸ்தீனத்தின் சமூக சேவகர் முஸ்தபா அல்ஜசீராவின் கிரேக் கார்ல்ஸ்டாமிடம் தெரிவிக்கும்போது அமெரிக்கா ஃபலஸ்தீனத்தின் அங்கீகாரத்தை எதிர்ப்பது தங்களுக்கு ஆச்சர்யம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் கடந்த வருடம் இதே கோரிக்கையை சிறந்த உத்தி என்று கூறிய ஒபாமா தற்போது அதை எதிர்ப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார்.
ஃபலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் கிடைத்தால் இஸ்ரேலுக்கு அந்நிய நாட்டை ஆக்கிரமித்த புதிய பிரச்சனை உருவாகும். எனவே அப்பாஸ் தலைமையிலான ஃபலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகாரம் கோருகிறது. வெள்ளை மாளிகை அப்பாஸின் கோரிக்கையை தடுக்க அனைத்து வழிகளிலும் முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒபாமா கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இவ்விவகாரம் தொடர்பாக பேசியதாவது; ‘ஃபலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும். நாம் அடுத்த வருடம் சந்திக்கும் போது ஐநாவில் புதிய உறுப்பினரை சேர்க்க உடன்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது’ என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அப்பாஸ் இம்முயற்சியில் தோல்வி கண்டால் ஐநா பொது சபையில் வாடிகன் இருப்பது போல ஃபலஸ்தீனும் மேம்படுத்தப்பட்ட பார்வையாளாராக இருக்க கோரிக்கை வைக்கும் அப்படி வைக்கப்படும் கோரிக்கைக்கு எதிராக அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஃபலஸ்தீனத்திற்கு ஐநாவின் அங்கீகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் இஸ்ரேல் உடனான பேச்சு வார்த்தைக்கு இது மேலும் வலுசேர்க்கும் குறிப்பாக ஜெருசலம், ஃபலஸ்தீன அகதிகளை திரும்ப ஒப்படைத்தல், நீர் மற்றும் பாதுகாப்பு ஆகிய பிரச்சனைகளில் இது ஃபலஸ்தீனத்திற்கு பெரிதும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment