Monday, September 12, 2011

பரமக்குடி கலவரம் 6 பேர் பலி, பதட்டத்தால் போலீஸ் குவிப்பு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை


arson_779215a

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 54-வது நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்புகள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் வந்து கொண்டிருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், தூத்துக்குடி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த தகவல் பரவியதும் அஞ்சலி செலுத்த வந்தவர்களில் ஒரு தரப்பினர் பரமக்குடி 5 முனை சந்திப்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய வாகனங் கள் திரும்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாருக்கும் மறியல் செய்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது.

சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி. சந்தீப்மிட்டல் விரைந்து வந்தார். அவரும் ஏற்கனவே அங்கு பாதுகாப்பிற்காக வந்திருந்த சென்னை போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன் மற்றும் டி.ஐ.ஜி. மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் திடீரென்று போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் கலவர தடுப்பு வாகனமான வஜ்ராவிற்கு ஒரு கும்பல் தீவைத்தது. இதில் அந்த வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த கடைகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் முதலில் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இருப்பினும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் குண்டு பாய்ந்து 6 பேர் பலியானார்கள்.

கலவரம், போலீஸ் துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பரமக்குடி உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பரமக்குடி உள்பட ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் நேற்று நடந்த கலவரம்-துப்பாக்கி சூடு சம்பவங்களில் 6 பேர் பலியானார்கள். 25 போலீசார் உள்பட 75 பேர் படுகாயம் அடைந்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza