தருமபுரி:வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
19 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் வழங்கப்படும் தீர்ப்பு என்பதால், தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில், இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்திய வனப்பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோரே குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்களின் முதன்மையானவர்களாவர். முக்கியக் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட இன்னொரு ஐ.எப்.எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கெனவே இறந்துவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர் என்பது கவனத்துக்குரியது.
தற்போது குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று நீதிபதி குமரகுரு தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஏற்கெனவே துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்பதாலும், அவர்களில் பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருப்பதாலும், அவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
முன்னதாக, வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வாதாடினர்.
இருதரப்பினரின் வாதமும் முடிந்த நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment