Wednesday, September 28, 2011

நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது – மத்திய திட்டக் குழு

imagesCA2CT4MO

டெல்லி:நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது கருத முடியாது என்று  மத்திய திட்டக் குழு ஒரு விநோத தகவலை தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களில் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.965 மற்றும் ரூ.781-க்கும் அதிகமாக செலவு செய்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருத இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தினசரி நகரங்களில் ரூ.32-க்கும், கிராமங்களில் ரூ.26-க்கும் அதிகமாக செலவிடுபவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்காக வழங்கப்படும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளை பெற முடியாது.

அதே நேரத்தில், சென்னை, புதுடெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய பெரு நகரங்களில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ரூ.3,860-ஐத் தாண்டினால் அந்தக் குடும்பத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு தானியங்களுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5.50, பருப்பு வகைகள், பால் மற்றும் சமையல் எண்ணெய்க்காக நாள் ஒன்றுக்கு முறையே ரூ.1.02, ரூ.2.33 மற்றும் ரூ.1.55 செலவிட்டால் போதுமானது என்று திட்டக்குழு தெரிவித்துள்ளது.

நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துக்காக மாதம் ஒன்றுக்கு ரூ.49.10-க்கும் அதிகமாக செலவு செய்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

மாதம் ஒன்றுக்கு மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக முறையே ரூ.39.70 மற்றும் ரூ.29.60 செலவிடுபவர்களை ஏழையாக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீடு தற்காலிகமானதுதான் என்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் தெண்டுல்கர் குழு அறிக்கைபடி இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் திட்டக்குழு தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza