டெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று கோரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், தன்னிச்சையான அமைப்பு என்பதால் தமது விசாரணையில் எவரும் குறுக்கிடக் கூடாது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், விசாரணை நீதிமன்றம் விசாரித்து வருவதால், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை தாம் அளித்தபோது, அதனை சிபிஐ ஏற்க மறுத்துவிட்டதாக மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி வாதத்தை முன்வைத்தார்.
அப்போது, அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்காவிட்டால், இந்த வழக்கின் விசாரணையில் மேலும் தாமதம் ஏற்படும் என்று ஆ.ராசாவின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு விசாரணை இன்று புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அனுப்பிய கடிதத்தால் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பொறுப்பு வகிக்கும் நிதியமைச்சகத்தால் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட மார்ச் 25 தேதியிட்ட கடிதத்தில், ’2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறையில் விற்பனை செய்ய தொலை தொடர்பு துறை பரிந்துரைத்தது.
ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001-ம் ஆண்டு விலையிலேயே 2007-ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். அவர் மட்டும் ஏல முறையை வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் இழப்பு நடந்திருக்காது,’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட இந்த ஆவணம், உச்ச நீதிமன்றத்திடம் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment