Tuesday, September 27, 2011

மனித உரிமையை புரட்டிப்போட்ட வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு செப்.29-க்கு ஒத்திவைப்பு

judgeHammer
தருமபுரி:தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாபட்டப்பட்டிருந்த மூன்றுபேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது.

மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வாதாடினர்.

இருதரப்பினரின் வாதமும் முடிந்த நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கூறப்படுவதாக இருந்தது.

தீர்ப்பு நேற்று வழங்கப்பட இருந்ததையொட்டி நீதிமன்றம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்களும் ஏராளமானோர் நீதிமன்றத்தின் முன் குவிந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் தவிர பலரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை நீதிமன்றம் கூடியதுமே இந்த வழக்கு குறித்த தீர்ப்பை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

வாச்சாத்தி வழக்கு..
வாச்சாத்தி கிராமத்தில் சுமார் 300 வீடுகள். கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதியில், மனித உரிமையை மல்லாக்கப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய அத்துமீறல் அங்கு நடந்தது. தமிழகத்தின் கடைக் கோடி மாவட்டமான தர்மபுரியில், அரூர் அருகே உள்ள குக்கிராமம்தான் வாச்சாத்தி. ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான கிராமம். கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்தக் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய வெறியாட்டம் அராஜகத்தின் உச்சகட்டத்தை எட்டி்யது.

இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில் அப்போது சந்தன மரங்கள் ஏராளம். இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர். சில தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் அம்பலப்பட… அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். ‘சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்…’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன. 

அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று… வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல்  கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். போலீஸார், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த அராஜக அட்டூழியச் செயலுக்கு 34 பேர் உயிரிழந்தனர். 18 பெண்கள் கற்பிழந்தார்கள். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வர… தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, இந்த வழக்கை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடத்தி வந்தது. 19 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த வழக்கின் விசாரணை, முடிவுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்தியது.

இதனிடையே, குற்றம் சாட்டப்​பட்டவர்​களில் ஏழு அரசு அதிகாரிகள், ‘சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய தர்மபுரி கலெக்டர் தசரதன், எஸ்.பி-யான ராமானுஜம், ஆர்.டி.ஓ-வான தெய்வ சிகாமணி ஆகிய மூவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் ஒரு முறை அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அது சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

உடனே அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்​துக்குப் போனார்கள். கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பாஷா, ‘சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த ஒரே காரணத்துக்காக, குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்க்கக் கோருவது வினோதம். வழக்கை மேலும் தாமதப்படுத்த இதுபோன்ற குறுக்கு வழிகளைக் கையாள்வது கண்டிப்புக்கு உரியது. இந்தக் குற்றத்துக்காக மனுச் செய்த ஏழு பேரும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு, தலா ரூ.10,000 அபராதமாகக் கட்டவும்’ என்று ‘ஷாக்’ கொடுத்ததோடு வழக்கு விசாரணையை துரிதமாக்கும்படி தர்மபுரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza