Monday, August 29, 2011

லோக்பால் மூலம் மிகப்பெரிய அற்புதத்தை எதிர்பார்க்க முடியாது: நீதிபதி சந்தோஷ் ஹெக்டே

imagesCANOC2G7
பெங்களூரு:லோக்பால் மசோதாவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேசமயம், மிகப் பெரிய அற்புதத்தை நாம் எதிர்பார்க்க முடியாது என்று நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.

ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. ஜனலோக்பால் வரைவு மசோதாவை உருவாக்கிய குழுவில் இவரும் ஒரு முக்கிய உறுப்பினர். இருப்பினும் அன்னா ஹஸாரேவின் போராட்ட முறையால் அதிருப்தி அடைந்து அதிலிருந்து விலகியிருந்தார் ஹெக்டே.

இந்த நிலையில் நாடாளுமன்ற தீர்மானம் குறித்து ஹெக்டே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாடாளுமன்ற தீர்மானம் வரவேற்புக்குரியது. இதை நான் வணங்கி வரவேற்கிறேன். இது வலுவான லோக்பாலுக்கான அடித்தளமாகும். இருப்பினும் மிகப் பெரிய அற்புதம் எதையும் மக்கள் எதிர்பார்க்க வேண்டாம். ஒரு சட்டம் உருவாகி அமலுக்கு வர கால அவகாசம் பிடிக்கும். அவசரப்பட்டு எதையும் கொண்டு வந்துவிட முடியாது.

மேலும் நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து நெருக்குதல் தருவதும் சரியான செயலன்று. பிரச்சினையை நாடாளுமன்றம் புரிந்து கொண்டு விட்டது. இதன் முக்கியத்துவத்தை அது உணர்ந்து கொண்டு விட்டது. எனவே அது தனது செயல்பாடுகளை தொடர நாம் அனுமதிக்க வேண்டும். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பெருமை எம்.பிக்களுக்கு உரித்தாகும். இது சட்டமாகும்போது நிச்சயம் அவர்கள் மிகப் பெருமிதம் கொள்ள முடியும்” என்றார் அவர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza