காஞ்சிபுரம்:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப் பட்டவர்களுக்கு தண்டனையை ரத்தாக்க வேண்டும் எனக்கோரி இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
காஞ்சிபுரத்தைச் சார்ந்த செங்கொடி(27) என்பவர்தான் அந்த இளம் பெண். அடுத்த மாதம் 9ம் தேதி சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத் துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி நேற்று மாலையில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்தின் முன்பு வந்த அவர் தனது கைப்பையில் வைத்திருந்த குளிர்பான பாட்டில்களை எடுத்தார். அதில் நிரப்பியிருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி சட்டென தீவைத்துக் கொண்டார்.
தீயில் கருகித் துடித்த அவர், பேரறிவாளன், முருகன், சாந்தனைக் காப்பாற்றுங்கள் என்று அலறியபடி கருகி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்து விட்டு செங்கொடியை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உடல் முழுவதும் கருகி பிணமாகி விட்டார்.
மரண முடிவுக்கு முன்பு செங்கொடி எழுதி வைத்திருந்த கடிதம் அவரது கைப்பையில் இருந்தது. அது போலீஸார் கையில் கிடைத்துள்ளது.
அதில் 21 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இதற்கு முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு தூக்கிலிருந்து மூவரையும் காப்பாற்ற வேண்டும்.
தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். இப்படிக்கு தோழர் செங்கொடி என்று அதில் கூறியுள்ளார் செங்கொடி.
செங்கொடி ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் ஆவார். மக்கள் மன்றத்தில் ஈடுபட்டு பொது சேவையில் ஈடுபட்டிருந்தார். பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்யக்கோரி காஞ்சீபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் செங்கொடியும் கலந்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
மூவரின் உயிரைக் காக்கக் கோரி பல்வேறு மட்டங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இளம் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் சிறை அதிகாரிகள் தங்களைத் துன்புறுத்துவதாக பேரறிவாளன் சிறைத்துறை டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment