Tuesday, August 23, 2011

திரிபோலி எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில்

16054352
திரிபோலி:லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபியிடம் மீதமிருந்த நகரமான திரிபோலி கிட்டத்தட்ட எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் பூரணமாக வந்ததையடுத்து 42 வருடகால கத்தாஃபியின் ஆட்சி முடிவு வந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிலையத்தை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். எதிர்ப்பாளர்கள் கவுன்சிலை லிபியாவின் அதிகாரப்பூர்வ அரசாக எகிப்து அங்கீகரித்துள்ளது.

எதிர்ப்பாளர்களின் ராணுவத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் லிபியாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் உற்சாகமாக லிபியா கொடியுடன் வீதிகளில் இறங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

நேட்டோ கூட்டணிப் படையின் உதவியுடன் எதிர்ப்பாளர்கள் திரிபோலியின் 90 சதவீத பகுதிகளையும் கைப்பற்றியதாகவும், திங்கள் கிழமை மாலையிலும் கத்தாஃபியின் வசிப்பிடம் அமைந்திருக்கும் பாபுல் அஸீஸியாவில் போராட்டம் தொடர்வதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் கத்தாஃபியின் மகன்களான ஸைஃபுல் இஸ்லாம் மற்றும் முஹம்மது ஆகியோரை எதிர்ப்பாளர்கள் கைதுச் செய்துள்ளதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அல்ஜஸீராவுடன் தொலைபேசியில் உரையாடிய வேளையில் எதிர்ப்பாளர்கள் முஹம்மதை கைதுச் செய்தனர்.

கத்தாஃபி அரசின் சர்வதேச முகமான அவரது இளையமகன் ஸைஃபுல் இஸ்லாமை போர்க் குற்றங்களின் பெயரால் சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் கத்தாஃபி எங்கே இருக்கிறார்? என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. நேற்று முன்தினம் கத்தாஃபி வெளியிட்ட அறிக்கையில் திரிபோலியிலிருந்து தான் எங்கேயும் செல்லப்போவதில்லை எனவும், எதிர்ப்பாளர்களிடம் சரணடையமாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார். கத்தாஃபி தனது திரிபோலியில் உள்ள வீட்டில்தான் இருக்க வாய்ப்புள்ளது என எ.எஃப்.பி செய்தி ஏஜன்சியை மேற்கோள்காட்டி பி.பி.சி கூறுகிறது.

திரிபோலியில் கத்தாஃபிக்காக எதிர்ப்பு போராட்டம் நடத்திய ராணுவத்தின் ஒரு பிரிவினர் சரணடைந்துள்ளனர். திரிபோலி எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்ததையடுத்து பதவி விலகவேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கத்தாஃபிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

லிபியா மக்களின் விருப்பத்திற்கு ஆதரவு அளிப்பதாக ரஷ்யா, சீனா நாடுகள் தெரிவித்துள்ளன. துனீசியா, எகிப்து மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து லிபியாவில் எழுச்சிப்போராட்டம் வலுப்பெற்றது. ஆறுமாத காலமாக தொடரும் போராட்டம் கடந்த சனிக்கிழமை மீண்டும் வலுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து திரிபோலியின் வடக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளின் முக்கிய நகரங்களை எதிர்ப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

தற்காலிக ஆட்சி கவுன்சில் திரிபோலிக்கு தனது செயல்பாட்டை மாற்றப்போவதாக எதிர்ப்பாளர்களின் தலைமை அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza