சென்னை:தமிழக சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் பதிலளித்துள்ளார்.
மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதாவது: பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடாக, 3.5 சதவீதம் இருக்கிறது. இதை உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என, தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் தெரிவித்தார். அறிவிப்பை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ படிப்புகள் மற்றும் அரசு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போன்றவற்றில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதில் பெரும் குழப்பங்கள் இருக்கின்றன. சிறுபான்மையினர் நலத்துறைக்கு, தனி செயலரை நியமிக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் முஹம்மது ஜான், ‘முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment